கோவை : 'குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சிதைவு அதிகரித்து வருகிறது; இதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்' என, இந்திய பல் மருத்துவ சங்க மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.இந்திய பல் மருத்துவ சங்க, தமிழக கிளை மற்றும் கோவை கிளை சார்பில், 34வது மாநில மாநாடு கோவை, ஜென்னீஸ் கிளப்பில் நேற்று துவங்கியது. விழா ஒருங்கிணைப்பு செயலாளர் சுரேந்திரன் கூறியதாவது:சங்கம் சார்பில், 16 ஆண்டுகளுக்கு பின், 34வது மாநில மாநாடு, கோவையில் நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் கருத்தரங்கில், பல் மருத்துவத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் விளக்கப்படுகிறது; ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்கின்றனர்.
மருத்துவர்களுக்கு, சிறந்த கல்வியை, கருத்தரங்கு வழங்கும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும், 1ம் தேதி, விழிப்புணர்வு மராத்தான் நடத்த உள்ளோம். 'இருமுறை பல் துலக்க வேண்டும்' என்பதே, மராத்தானின் கருப்பொருளாக இருக்கும். 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.
இன்று, குழந்தைகளுக்கு பற்சிதைவு என்பது அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம். பல் மருத்துவர்கள், பல் வலிக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மட்டுமல்ல. உங்கள் புன்னகையை அழகுபடுத்தக்கூடியவர்கள்; பல் வரிசையை சீர்படுத்த கூடியவர்கள். இதை வலியுறுத்த, இம்மாநாடு நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூணன், கருத்தரங்கை துவக்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார். இந்திய பல் மருத்துவ கவுன்சில் தமிழக பிரதி (தேர்வு) ராமசாமி, இந்திய பல் மருத்துவ சங்க மாநில தலைவர் அருண்குமார், செயலாளர் செந்தாமரை கண்ணன், விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாபு, குழு உறுப்பினர் அன்னபூரணி பாலாஜி, குழு பொருளாளர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.