புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்தவர் சந்தானம், 42. இவருக்கும், இவரது சகோதரர் சிவராமகிருஷ்ணமூர்த்தி, 49, என்பவருக்கும் இடையே இடபிரச்னை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த, 2015ம் ஆண்டு, சந்தானம் வெட்டி கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடப்பன்வயலை சேர்ந்த அவரது சகோதரர் சிவராமகிருஷ்ணமூர்த்தி, இவரது மகன் மணிகண்டன், 26, மற்றும் உறவினர்கள் விஜய்குமார், 25, திருமுருகன், 24 ஆகிய, 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி அப்துல்மாலிக் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சந்தானத்தை கொலை செய்த குற்றத்துக்காக மணிகண்டன், விஜய்குமார், திருமுருகன் ஆகிய, 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சிவராமகிருஷ்ணமூர்த்தி குற்றவாளி என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.