கிருஷ்ணகிரி :பிரதமர் மோடி பெயரைச் சொல்லி, 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய, மாவட்ட, பா.ஜ., மகளிர் அணி தலைவி மீது, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த உத்தமன்கொட்டாயைச் சேர்ந்த, 15 பேர் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:
மிட்டஅள்ளி பஞ்சாயத்து, திரவுபதியம்மன் கோவில் கொட்டாயைச் சேர்ந்தவர், மாவட்ட, பா.ஜ., மகளிர் அணி செயலர் ஜெயலட்சுமி, 35. இவரது கணவர் தருமன், 37. குரும்பட்டியைச் சேர்ந்தவர் அன்னேஜ்.
இவர்கள் மூவரும், எங்களிடம், பா.ஜ.,வில் உறுப்பினராகச் சேர்ந்தால், மோடியிடம் இருந்து, கறுப்பு பணத்தை ஒவ்வொருவருக்கும், தலா, 6 லட்சம் ரூபாய் பெற்று தருவதாகவும், அதற்கு, வங்கி கணக்கு துவங்க, தலா, 6,000 ரூபாய், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பழைய வங்கிக் கணக்கு பாஸ்புக் நகல், 24 போட்டோ கொடுக்க வேண்டும் எனக் கேட்டனர்.
அதை நம்பி நாங்களும், கொடுத்தோம். இன்று வரை, எங்களுக்கு வங்கி கணக்கு துவங்கவில்லை; பணமும் வரவில்லை. கொடுத்த பணத்தை கேட்ட போது, 'கறுப்பு பணம் வாங்கித் தர, நாங்கள் தலா, 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். மீதிப் பணம் தலா, 29 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என, மிரட்டுகின்றனர்.
இதேபோல், 700க்கும் மேற்பட்டோரிடம், 40 லட்சம் ரூபாய் வரை பெற்று, ஏமாற்றி உள்ளனர். பிரதமர் மோடி பெயரைச் சொல்லி ஏமாற்றிய மூன்று பேர் மீதும், நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.போலீசார் விசாரிக்கின்றனர்.
***