திருப்பூர்:உயர்மின்கோபுரம் அமைக்கும் இடங்களில், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி தர வேண்டுமென, கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.விளை நிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டால், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையை, அதிகரித்து தர வேண்டுமென, கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில பொது செயலாளர் ராஜாமணி, மாநில தலைவர் முருகேசன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு:உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் போது, வழித்தடத்திற்கு, 15 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதம்; கம்பம் நடும் இடத்தில், 3 சென்ட் நிலத்திற்கு, 16 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்; புதிதாக, 3 சென்ட் நிலப்பரப்புக்குள் இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் என, இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க, முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், தென்னை மரத்துக்கும், அதன் வயதுக்கு ஏற்ப இழப்பீடு தொகையை உயர்த்த வேண்டும். கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகள், தென்னை மரங்களின் வயதை குறைத்து மதிப் பிடுகின்றனர்.அதனால், எவ்வித பாகு பாடும் ஏற்படாத வகையில், 10 முதல், 30 வயதுள்ள தென்னை மரங்களுக்கு, 36,450 ரூபாய் என இழப்பீடு தொகையை நிர்ணயிக்க வேண்டும். அத்தொகையை, விவசாயிகளுக்கு அளித்த பின்னரே பணிகளை துவங்க வேண்டும்.குறிப்பாக, ஏற்கனவே இழப்பீடு வழங்கி, பணிகளை துவங்கிய இடங்களிலும், புதிய தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.