சிறுநீரக தொற்றால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?பெண்களுக்கு, குறிப்பாக சர்க்கரை கோளாறு இருக்கும் பெண்களுக்கு, சிறுநீரக தொற்று ஏற்படுவது சகஜம். இதற்கு, மிக பொதுவான காரணம், இயற்கையிலேயே பெண்களின் சிறுநீரகக் குழாயின் நீளம் மிகவும் சிறியது என்பது தான்.இது தவிர, சிறுநீரகங்கள் முழுக்க தொற்றை ஏற்படுத்தும், 'லோநெப்ரைடீஸ்' என்ற நிலை, சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஏற்படும். இதுவும் பொதுவான விஷயம்.சிறுநீரக தொற்றால் ஏற்படும் அறிகுறிகள்?சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிலருக்கு அதிக காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது என, ஒன்றோ, ஒன்றுக்கும் அதிகமான அறிகுறிகளோ இருக்கும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் வெளியில் தெரியாமலும் இருக்கும்.சிறுநீரக தொற்று இருந்தால், அடிவயிற்றில் வலி அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அழுத்தம், ஒருவிதமான அசவுகரியமான உணர்வு இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது, கட்டுப்பாடு இல்லாமல் போவது, சிறுநீர் கழித்த சில நிமிடங்களில், மீண்டும் கழிக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கு இருக்கும்.சர்க்கரை கோளாறுக்கும், சிறுநீரக தொற்றுக்கும் என்ன தொடர்பு?நம் உடலில், குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது, பாக்டீரியா அதிக அளவில் பெருகும். எந்த பகுதியில் சர்க்கரை அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் பாக்டீரியா வளரும். காரணம், பாக்டீரியா கிருமிகள் வளர்வதற்கு, சர்க்கரை பிரதான உணவு.சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு, சிறுநீரில், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பாக்டீரியா கிருமிகள் அதிகம் வளர்ந்து, தொற்று பரவி விடும்.கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சர்க்கரையின் அளவு, ரத்தத்தில் அதிகரிக்கும் போது, நரம்புகளின் கட்டுப்பாடு குறைந்து விடும். இதனால், சிறுநீரை கட்டுப்படுத்தும் திறன் குறையும்.தொற்று இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?அடிவயிற்றை தொட்டாலே, ஒரு டாக்டரால் இதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும். அடிவயிற்றை அழுத்தும் போது வலி இருக்கும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். சிறுநீரில் ரத்தக்கசிவு இருந்தாலும், அது தொற்றின் அறிகுறி தான். பாக்டீரியா தொற்று, ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களை துாண்டுவதால், சிறுநீரில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. பாக்டீரியா தவிர, பூஞ்சை தொற்றும் காரணமாக இருக்கலாம்.சிறுநீரக தொற்றுக்கான சிகிச்சை முறைகள் என்ன?தொற்று இருப்பது தெரிந்தவுடன், 'ஆன்டிபயாடிக்' மருந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. முதலில், சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவு, 48 - 72 மணி நேரத்தில் கிடைக்கும்.என்ன வகை பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளது, எந்த அளவு கிருமிகள் வளர்ந்திருக்கிறது, மாத்திரைகளால் இதை கட்டுப்படுத்த முடியுமா, ஊசி மருந்து தேவைப்படுமா என தெரிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சையை துவக்க வேண்டும்.அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்பட்டால், 'அல்ட்ரா சவுண்டு' பரிசோதனை செய்ய வேண்டும். இதில், சிறுநீரக குழாய், சிறுநீரக பைகளில் தொற்று உள்ளதா என தெரிந்து விடும். சிறிய கற்கள் இருந்தாலும் தெரிந்துவிடும். அல்ட்ரா சவுண்டு அல்லது சி.டி., ஸ்கேன் செய்தால் மட்டுமே, முழுமையாக தெரியும்.தொற்றை தவிர்க்க, என்ன செய்யலாம்?சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றினால், உடனடியாக கழித்து விட வேண்டும். அதிக நேரம் அடக்கியபடி இருக்கக் கூடாது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உள்ளாடை, பருத்தியால் ஆன, வெளிர் நிறமாக இருக்க வேண்டியது அவசியம்.சர்க்கரை நோயாளிகளுக்கு, சாதாரணமாகவே தாகம் அதிகம் எடுக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் பாதை முழுவதும் வறட்சியாகி, பாக்டீரியா வளர்வது, இன்னும் எளிதாகி விடும்.பொது கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்த்தால் தொற்றை தவிர்க்கலாமா?பொதுக் கழிப்பிடங்களை பயன்டுத்தும் போது, கவனமாக இருக்க வேண்டும். இந்திய முறை கழிப்பறை, மற்றவற்றை விடவும் பாதுகாப்பானது. மேற்கத்திய முறை கழிப்பறையை பயன்படுத்தினால், பயன்படுத்துவதற்கு முன் துடைக்க வசதியாக, கண்டிப்பாக, 'டிஷ்யூ பேப்பர்' கொண்டு செல்ல வேண்டும். சர்க்கரை கோளாறு இருக்கும் பெண்கள் என்றில்லை; பெண்களுக்கே சிறுநீரக தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கழிப்பறை கவர்களை, வெளியிடங்களுக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது நல்லது. கழிப்பறையை பயன்படுத்தும் போது, சுத்தம் செய்வதற்கு தண்ணீர் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இதற்கென்றே இருக்கும் திரவங்களை, எரிச்சல், வலி இருக்கும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதோடு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சராசரி சர்க்கரை அளவை பரிசோதிக்கும் சோதனையை செய்து கொள்வது அவசியம்.சுய சுகாதாரம் எந்த அளவு உதவும்?பெண்களிடம் சுய சுகாதாரம் குறைவாகவே உள்ளது. வீட்டை, குழந்தைகளை பார்க்கிறோம் என, தங்களை பார்த்துக் கொள்வதில்லை. ரத்த சர்க்கரையின் அளவையும், கட்டுக்குள் வைப்பதில்லை. தொற்று ஆரம்பித்த உடன், டாக்டரிடம் வருவதில்லை. அவர்களாக வீட்டு வைத்தியம் செய்து, முடியாத பட்சத்தில் வருவதும் அதிகம்.இதனால், சிறுநீர் குழாயில் ஏற்பட்ட தொற்று, சிறுநீர் பைகளுக்கு சென்று விடுகிறது. இந்நிலையில், மாத்திரை மட்டும் வேலை செய்யாது. ஊசி மூலம் அதிக, 'டோஸ்' உள்ள மருந்து தர வேண்டும். தொடர்ந்து, இரண்டு மாதங்கள் கூட மருந்து தேவைப்படலாம்.டைப் - 1 நீரிழிவு உள்ள, 20 வயதிற்குட்பட்ட பெண்கள், மாதவிடாய் நேரத்தில், நாள் முழுவதும் நாப்கினை மாற்றுவதேயில்லை. இதனாலும், தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு, நான்கு முறையாவது, நாப்கின்களை மாற்ற வேண்டும்.