அம்பத்துார்: பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் பங்கேற்ற நெகிழ்ச்சிகரமான சந்திப்பில், எம்.எல்.ஏ., சென்னை போலீஸ் கமிஷனர், விஞ்ஞானி உட்பட, பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று, தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.அம்பத்துார், சர்.ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில், 1979ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவர்கள், 40 ஆண்டுகளுக்குப் பின் நேற்று சந்தித்தனர்.இதில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அணு ஆற்றல் விஞ்ஞானி சிவராமன் உட்பட, 200 பேர் மற்றும் ஆசிரியர்கள், 42 பேர் பங்கேற்றனர்.ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும், அதே பள்ளியில், 1982ம் ஆண்டில், 10ம் வகுப்பு படித்தவரான, பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்றார்.இது குறித்து பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 'எங்களது ஆசிரியர்களை, 40 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம்' என்றனர்.