சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு, நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம், 2.2 செ.மீ., மழை பெய்தது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு, 315 கன அடி நீர்வரத்து கிடைத்தது. புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில், 1.7 செ.மீ., மழை பெய்தது. பூண்டி ஏரியில் இருந்தும், புழலுக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு, 410 கன அடி நீர்வரத்து கிடைத்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில், 1.6 செ.மீ., மழை பெய்ததால், வினாடிக்கு, 38 கன அடி நீர்வரத்து கிடைத்தது. வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், 8.3 செ.மீ., மழை பெய்ததால், வினாடிக்கு, 1,911 கனஅடி நீர்வரத்து கிடைத்தது.
இதனால், நான்கு ஏரிகளின் நீர்இருப்பும் தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளன. சோழவரம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், 1.8 செ.மீ., மழை பெய்தாலும், நீர்வரத்து இல்லை.