எதிர்பார்ப்பு! மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ... குறைதீர் முகாமில் விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

எதிர்பார்ப்பு! மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ... குறைதீர் முகாமில் விவசாயிகள் கோரிக்கை

Added : நவ 30, 2019
எதிர்பார்ப்பு! மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ... குறைதீர் முகாமில் விவசாயிகள் கோரிக்கை

மதுரை : மதுரை மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் வினய் தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

முதலைக்குளம் விவசாயி ராமன்: திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் முறைவைத்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நன்றி. இதனால் முதலைக்குளம், கறிவேப்பில்லை, கோவிலாங்குளம், கண்ணனுார் உள்ளிட்ட 13 கண்மாய்கள் பாசன வசதி பெறும். விவசாயத்திற்கான இலவச மின்சாரம் கேட்டு தட்கல் முறையில் விண்ணப்பித்தோருக்கு 262 ஒதுக்கீடு மட்டுமே கிடைத்தது. 'தினமலர்' செய்தி எதிரொலியாக தற்போது கூடுதலாக 250 ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

முதலைக்குளம் பெரிய கண்மாய் ரூ.30 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி நடக்கிறது. இதற்காக 500 விவசாயிகளுடன் ஏழு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் குடிமராமத்து பணி முறையாகவும், முறைகேடு இன்றியும் நடக்கிறது. மழைக்காலத்தில் நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே மருத்துவ குழுவுடன் கூடிய நடமாடும் வாகனத்தை கிராமம் தோறும் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலெக்டர்: திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பொதுப்பணித்துறை இப்போதே தண்ணீர் திறக்கலாம். முறைவைத்து தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நடமாடும் மருத்துவ வாகனம் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். உசிலம்பட்டி ஒத்தப்பனையூர் விவசாயி முருகன்: குடிமராமத்து பணி முறையாக நடக்கவில்லை. விவசாயிகள் இடம் பெறவில்லை. கண்மாய்க்குள் கருவேல மரங்களை அகற்றியும், கரைகளை உயர்த்தி கட்டியும் ரூ.30 முதல் ரூ.50 லட்சம் செலவிட்டதாக கணக்கு காட்டுகின்றனர்.

வரத்து கால்வாய்களை புனரமைக்கவில்லை. இதனால் மழை நீர் கண்மாய்க்கு வரவில்லை. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம்: தவறு. விவசாயிகள் முன்னிலையில் குடிமராமத்து பணி சிறப்பாக நடக்கிறது. மழை பெய்வதால் எஞ்சிய பணிகள் ஜனவரியில் நடக்கும்.
கலெக்டர்: விவசாயிகள் விரும்பினால் குடிமராமத்து பணிகளை பார்வையிடலாம். அழைத்து செல்ல பொதுப்பணித்துறை தயாராக உள்ளது.

பேரையூர் விவசாயி பாண்டியன்: தேவையான மழை பெய்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தாலுகா வாரியாக மழையளவு குறிப்பிடவில்லை. மழை பெய்திருந்தால் பேரையூர் பகுதியில் 98 கண்மாய்கள் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் அவை வறண்டுள்ளன.

வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன்: அடுத்த குறைதீர் முகாமில் தாலுகா வாரியாக மழையளவு வெளியிடப்படும்.

மன்னாடிமங்கலம் விவசாயி முருகன்: தென்கரை கண்மாய் ரூ.69 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி நடந்ததாக பொதுப்பணித்துறை கூறுகிறது. விவசாயிகள் இல்லாமல் பணி நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர். எங்களை போன்ற விவசாயிகள் குழுவில் இடம் பெறவில்லை. கண்துடைப்பாக பணி நடந்துள்ளது. கண்மாயில் மீன் வளர்க்க தடை இருந்தும் வளர்க்கப்படுகிறது. மீன்களுக்கு உணவாக இறைச்சி கழிவுகளை கண்மாயில் கொட்டி தண்ணீரை மாசடைய செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.

வாடிப்பட்டி விவசாயி சுந்தர்ராஜன்: பூமிதானம் கூட்டுறவு சங்கம், கிராமதானம் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 45 சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களின் செயல்பாடுகள் மேன்மையடைய மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கலெக்டர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாடக்குளம் விவசாயி மாரிச்சாமி: மாடக்குளம் கண்மாயின் வரத்து கால்வாய்கள் 35 ஆண்டுகளாக துார்ந்துள்ளது. இக்கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல கொடிமங்கலம் வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை கடந்த பிப்ரவரியில் கூறியது.

திட்டம் நிறைவேறுமா? நிலையூர் கால்வாயில் இருந்து துவரிமான், மாடக்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் எடுப்பதால் இரு கிராம மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்ற மாடக்குளம் கண்மாய் தற்போது 1850 ஏக்கர் நிலம் பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கண்மாயை சுற்றிலும் 37 ஆயிரத்து 500 போர்வெல்கள், ரயில்வே சார்பில் ஐந்து ராட்சத போர்வெல்கள், திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிக்கு கண்மாயில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதால் ஏராளமான விவசாய நிலம் பாதிக்கப்படும். அணைகளை துார்வாராமல் தண்ணீர் மட்டும் எடுப்பது நியாயமல்ல. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம்: மாடக்குளம் வரத்து கால்வாய்கள் துார்ந்தது உண்மை தான். தற்போது 12 கி.மீ., தொலைவிற்கு வரத்து கால்வாய் புனரமைக்கப்பட்டுள்ளது.

கொடிமங்கத்தில் தடுப்பணை கட்ட நிதி கோரி நபார்டு வங்கிக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் உடன் தடுப்பணை கட்டப்படும். தடுப்பணை மூலம் மாடக்குளம் கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் எடுக்கப்படும். துவரிமான் கண்மாய்க்கு தண்ணீர் எடுக்க மாற்று திட்டம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X