அரசு சார்பில் மஞ்சள் கொள்முதல் நடக்குமா? வேளாண் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பதில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு சார்பில் மஞ்சள் கொள்முதல் நடக்குமா? வேளாண் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பதில்

Added : நவ 30, 2019

ஈரோடு: ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில், டி.ஆர்.ஓ., கவிதா முன்னிலையில் வேளாண் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. இதில் நடந்த விவாதம் வருமாறு:
மேட்டூர் வலது கரை பாசன சபை பழனிசாமி: மேட்டூர் வலது கரை பாசனப் பகுதி, சின்னியம்பாளையம், காடையம் பட்டி உட்பட பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, பல விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி, கலெக்டர் உத்தரவிட்டு, அதிகாரிகள் வந்தபோது, ஆக்கிரமிப்பு செய்தவர், தீக்குளிக்கப்போவதாக கூறியதும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்று விட்டனர். பவானி காடையம்பட்டி பகுதியில், சாயப்பட்டறை நீரை சுத்திகரிப்பு வெளியேற்ற, அரசு வழி செய்ய வேண்டும்.


கலெக்டர் கதிரவன்: வரும், 3ல் டி.எஸ்.பி., தலைமையில், வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள். கிளை, கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். காடையம்பட்டி பகுதியில், 200 கோடி ரூபாயில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி: மஞ்சளுக்கான விலை குறைவதால், மஞ்சள் விவசாயிகள், பிற பயிருக்கு மாறுகின்றனர். அரசு சார்பில் மஞ்சளை, குவிண்டால், 15 ஆயிரம் ரூபாய் என விலை வைத்து கொள்முதல் செய்ய வேண்டும்.


கலெக்டர்: கடந்த மாதமே, அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். அரசு சார்பில் நாபெட் போன்றவை மூலம் கொள்முதல் செய்ய கேட்டுள்ளோம். தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்று அரசு சார்பில் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ததால், அங்கு மஞ்சளுக்கு விலை கிடைத்துள்ளது. அந்த அரசாணையை பெற்று, இங்கும் செயல்படுத்த கேட்டுள்ளோம்.


தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி தளபதி: கோபி சொசைட்டியில் செஸ் வரி, 5.5 சதவீதம் வாங்குகின்றனர். ஆனால் அங்கு கழிப்பறை, குடிநீர், கேன்டீன் இல்லை. நீர் நிலை உட்பட நில ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால், மாவட்ட, வருவாய் கோட்ட அளவில் இதற்காக தனி குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். கோபி - சத்தி - சாம்ராஜ் நகர் சாலை விரிவாக்கம் குறித்தும், கோபி புறவழிச்சாலை குறித்தும் ஆய்வு நடக்கிறது. கோபியில், 72 சென்ட் நிலத்தை அகற்றினால், சாலையை கொண்டு செல்லலாம் என்பதை மாற்றி, 200 ஏக்கர் விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லும்படி திட்டத்தை மாற்றுகின்றனர். சிலரது பயன்பாட்டுக்காக, இம்மாற்றத்தை செய்யக்கூடாது.


கலெக்டர்: கோபி - சத்தி - சாம்ராஜ் நகர் நெடுஞ்சாலைக்காக, திட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. புலிகள் காப்பகம் பகுதியில் குறுகிய சாலையாகவும், பிற பகுதியில் அகலமான சாலையாகவும் அமையும். இவ்வழிப்பாதையில் தரைப்பாலம், உயர்மட்ட மேம்பாலம், சேவை சாலைகள் போன்றவற்றை கணக்கிட்டு, அதன்பின் பணி துவங்கும். கோபி புற வழிச்சாலைக்காக, வீடு உள்ளிட்ட நகரப்பகுதி நிலத்தை கையகப்படுத்தாமல், விளை நிலம் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X