ஈரோடு: ''காளிங்கராயன், நொய்யல் போன்ற நீர் நிலைகளில் சிமென்ட் லைனிங் பணி செய்ய, 3,000 கோடி மதிப்பிலான திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கதிரவன் தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது.
காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: காளிங்கராயன் வாய்க்காலில் காளிங்கராயன் பாளையம் முதல், கருங்கல்பாளையம் வரை சிமென்ட் லைனிங் செய்யப்பட்டுள்ளது. அதன்பின், வெண்டிபாளையம் வரை, பத்து கி.மீ.,க்கு லைனிங் செய்ய வேண்டும். காளிங்கராயன் பாசன பகுதியில், 15 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டாக உள்ள நிலையில், 7,000 ஏக்கர் ஆயக்கட்டாக இல்லாமல், பிற பயன்பாட்டு நிலமாக மாற்றப்பட்டு விட்டதாக, டி.ஆர்.ஓ., கூறியதாக செய்தி வருகிறது. செங்கல் சூளை, வீட்டுமனை என, 150 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி மாறி இருக்கலாம்.
கலெக்டர் சி.கதிரவன்: காளிங்கராயன் பாசன ஆயக்கட்டு பகுதியில், வீடு, தொழிற்சாலை, பிற பயன்பாட்டு நிலங்கள் அளவீடு செய்யப்படுகிறது. இதன்படி, 700 ஏக்கருக்கு மேல் பிற பயன்பாட்டுக்கு மாறியதை உறுதி செய்துள்ளோம். தொடர்ந்து அளவீடு நடக்கிறது.
காளிங்கராயன் வாய்க்கால், நொய்யல் ஆற்றுப்பகுதி என முக்கிய நீர் நிலைகளை சிமென்ட் லைனிங் செய்ய, 3,000 கோடி ரூபாயில் திட்ட வரைவு அனுப்பப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. அறிவிப்பு வெளியானால், பணிகள் துவங்கும். தவிர நீர் நிலைகளின் ஓரங்களில் தற்போது, ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. கடந்த, பத்து முதல், 30 ஆண்டுக்கு முன் அமைந்த ஆலைகளை, என்ன செய்வது என தெரியவில்லை.