அரூர்: அரூர் அருகே, போலீஸ் உடையில் வந்தவர்கள், டிரைவரை கட்டி போட்டு, அரிசி லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த மாதேஸ்வரன், 55, லாரி டிரைவர்; இவர், காஞ்சிபுரத்தில் இருந்து, கரூருக்கு டாரஸ் லாரியில், 25 கிலோ எடை கொண்ட, 900 மூட்டை பொன்னி அரிசியை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வந்து கொண்டிருந்தார். அரூர் - சேலம் சாலையில், விஜயநகரம் அருகே வந்த போது, போலீஸ் உடையில் பைக்கில் வந்த இருவர் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின், மாதேஸ்வரனிடம் லாரியை நிறுத்த மாட்டாயா எனக் கேட்டுள்ளனர். தொடர்ந்து, டாடா சுமோ காரில் நான்கு பேர் வந்துள்ளனர். பின், ஆறு பேரும் சேர்ந்து, மாதேஸ்வரனின் கை, கால்கள் மற்றும் கண்ணை கட்டி, லாரியில் இருந்து இறக்கி டாடா சுமோவில் கடத்திச் சென்றனர். அதிகாலை, 5:30 மணிக்கு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே மாதேஸ்வரனை கடத்தல் கும்பல் கீழே தள்ளி விட்டுச் சென்றது. அப்பகுதியில் ரோந்தில் இருந்த, ஹைவே மொபைல் போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து மாதேஸ்வரன் கூறியுள்ளார். இதையடுத்து, அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நேற்று மாலை மாதேஸ்வரனை, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணாக, பதிலளித்துள்ளார். இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட அரிசி லாரி சங்ககிரி அருகேயுள்ள சுங்கச்சாவடியை காலை, 5:24 மணிக்கு கடந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. எல்லை பிரச்னையை காரணம் காட்டி, அரூர் மற்றும் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தினர். இறுதியில், கோபிநாதம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என தெரிய வந்ததையடுத்து, கோபிநாதம்பட்டி போலீசார் நேற்றிரவு வழக்கு பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE