தமிழ்நாடு

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை திடீர் மரணம்: 39 ஆண்டுகால ஆசி நிறைவு; மக்கள் கண்ணீர் அஞ்சலி

Added : நவ 30, 2019
Advertisement

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 39 ஆண்டுகாலம் கோலோச்சிய, பெண் யானை வேதநாயகி, நோயுடன் போராடிய நிலையில், நேற்று அதிகாலை மரணம் அடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள், மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, 1980ல் மூன்றரை வயதான வேதநாயகி யானையை, ஊர் மக்கள் வாங்கி கொடுத்தனர். கோவில் நிர்வாகம் யானையை பராமரித்தது. கடந்த, 2015ல் முதல் முறையாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவ குழு தொடர் சிகிச்சையால், சிறிது உடல் நலம் தேறியது. இதன் காரணமாக, மேட்டுப் பாளையம் அருகே தேக்கடியில் நடக்கும், யானைகள் புத்தாக்க முகாமுக்கு செல்லவில்லை. அதே சமயம் மருத்துவக்குழுவின், தொடர் கண்காணிப்பில் வேதநாயகி இருந்தது. வாய் மற்றும் கழுத்து, வலது முன்னங்கால் பகுதியில் நீர்க்கட்டு, வீக்கத்தால், பத்து நாட்களாக, எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. தூக்கமின்றி இரவு, பகல் பாராமல் நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து, வேதநாயகி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று உயரிய சிகிச்சை அளிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'பவானி கோவில் யானைக்கு, மாவட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, வன உயிரினகாப்பாளர், கால்நடை டாக்டர்கள் உரிய சிகிச்சை வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

இந்நிலையில் மிகுந்த சோர்வடைந்திருந்த யானையை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர், நேற்று முன்தினம் பரிசோதனை செய்தனர். ரத்தம், சிறுநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். சோதனை முடிவு கிடைத்த பின், அடுத்தகட்ட சிகிச்சையளிக்க காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 5:10 மணியளவில் எதிர்பாராதவிதமாக, வேதநாயகி யானை இறந்தது. இதையறிந்ததும், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், யானை உடலுக்கு அஞ்சலி செலுத்த, கண்ணீருடன் குவிந்தனர். கூட்டம் அதிகரிக்கவே, பவானி, டி,எஸ்,பி., சேகர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். யானை இறந்ததால், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் கதவு பூட்டப்பட்டது. கோவில் வளாகத்தில் இருந்த சில கடைகளும் அடைக்கப்பட்டன. மதியம், 1:40 மணியளவில், யானையின் உடலை அடக்கம் செய்யும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் உதவியால், யானை உடல் தூக்கப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கூடுதுறை கோவில் பகுதியில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகில், குழி தோண்டி, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

39 ஆண்டுகால ஆசி நிறைவு: பவானி கோவிலில், 39 ஆண்டுகளாக, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த வேதநாயகி யானை, இறந்தது, பக்தர்கள், மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு உடல் நலம் பாதித்ததும், அதற்கான உரிய சிகிச்சை அளிக்க கூடிய இடத்துக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்திருந்தால், திடீர் மரணம் ஏற்பட்டிருக்காது என்று, பலர் வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X