புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்த துப்புரவு பணியாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அறந்தாங்கி அருகே பெரியாளுரைச் சேர்ந்த கார்த்தீபன்,38 என்பவர் கடந்த, 25ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரது தாடையில் ஏற்பட்ட காயத்தால் வெளியான ரத்தத்தை துடைத்து மருத்துவமனை துப்புரவு பணியாளர் கோவிந்தராஜ்,54 என்பவர் தையல் போட்டார். தொடர்ந்து, துப்புரவு பணியாளர் விபத்தில் சிக்கியவருக்கு தையல் போடும் காட்சி சமூக வலை தளங்கங்களில் வெளியானது. இதுகுறித்து, விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், துப்புரவு பணியாளர் கோவிந்தராஜை நேற்றுமுன் இரவு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டார்.