நாமக்கல்: 'தாண்டாக்கவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பல லட்சம் ரூபாய் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, கலெக்டரிடம், பால் உற்பத்தியாளர்கள் மனு அளித்துள்ளனர்.
அதன் விபரம்: சேந்தமங்கலம் ஒன்றியம், உத்திரகிடிக்காவல் பஞ்., தாண்டாக்கவுண்டனூரில், 1985 முதல், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், 350 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், 600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இரு ஆண்டுகளாக பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு சரியாக பண பட்டுவாடா செய்யப்படவில்லை. சங்கத்தின் கையிருப்பு, எட்டு லட்சம் ரூபாய் முறைகேடான வழியில் சென்றதாக தெரிகிறது. தீவனம் கொள்முதல் முறைகேடு, இருப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்படாதது, உறுப்பினர்களிடம் வசூல் செய்ததில் ரசீது போடாமல், சங்கக் கணக்கில் வரவு வைக்காமல் இருத்தல், கலப்பு தீவனத்தை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தல் என பல்வேறு வழிகளில் முறைகேடு செய்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, கலெக்டர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.