பொது செய்தி

தமிழ்நாடு

அழுகல் நோயால் 1,000 ஏக்கர் வெங்காய சாகுபடி பாதிப்பு: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கவலை

Added : நவ 30, 2019
Advertisement

நாமக்கல்: 'ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்தில், அழுகல் நோயால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:


துரைசாமி (விவசாயி): ராசிபுரத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விலை அதிகரித்துள்ள நிலையில், அழுகல் நோய் காரணமாக, பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அவற்றுக்கு, என்ன வகையான மருந்து தெளிப்பது என்பது குறித்து உரிய விளக்கமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.


பெரியதம்பி (விவசாயி): கம்பராமாயணத்தில் வரும், 'கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதுபோல், கடன் பட்டதால், விவசாயிகளுக்கு இவ்வளவு வேதனை இருக்கிறது. அதனால், தற்கொலை செய்து கொள்கின்றனர்.


மெகராஜ் (கலெக்டர்): லஞ்சம் வாங்கி கைதாகும் அதிகாரிகள் யாராவது மானம் போய்விட்டது என தற்கொலை செய்து கொள்கிறார்களா. ஆனால், விவசாயிகள், வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால், வேதனைப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன், விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. விவசாயிகள் என்றால் யார் என கேட்கும் நிலை. அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு பஸ் என்றால், வேண்டாம் எனக்கூறுவோர், அரசு வேலை என்றால், உடனே வந்துவிடுகின்றனர்.


ராஜேந்திரன் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர்): பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், கடந்த, அக்., 30 வரை, பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தற்போது, 28 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் வழங்கவில்லை. காரணம், சேலத்தில் 'பில்' போட வேண்டும் என்கின்றனர். நாமக்கல் ஒன்றியத்தில், 20 கோடி ரூபாய் இருப்புள்ளது.


சரவணன் (விவசாயி): பொறியியல் இயந்திரம் வாடகைக்கு வேண்டும் என்றால், மாவட்ட அளவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவற்றை, வட்டார அளவில் பதிவு செய்து பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலக்கடலை செக்கில் எண்ணெய் எடுப்பதற்காக, 1,000 பேர் கொண்ட, பத்துக்குழுக்களுக்கு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலக்கடலையை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தால், இடைத்தரகர்கள் தலையீடு இருக்காது.


சந்திரசேகரன் (மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவோர் சங்க நிர்வாகி): பட்டா மாற்றம் செய்யும்போதே, மின் இணைப்பு பெயரையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

'காலைக்கதிருக்கு' நன்றி தெரிவித்த கலெக்டர்: விவசாயி சரவணன், ''சாலையோரம் உள்ள முட்டுக் கல்லை பராமரிக்காததால், குப்பையை கொட்டிச்செல்கின்றனர்,'' என்றார். அப்போது பேசிய கலெக்டர், ''குப்பையை அகற்ற, 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறோம். பல லட்சம் செலவு செய்வதைவிட, சாக்கடை கால்வாய், சிறுபாலம் கட்டினால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த நேரத்தில், 'காலைக்கதிருக்கு' நன்றி சொல்ல வேண்டும். 1,000 பேர் சொல்வதற்கு சமமாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X