மோகனூர்: மோகனூர் வட்டாரத்தில், வேளாண் துறையில், மத்திய, மாநில அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆண்டாபுரம் கிராமத்தில், தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம், மண்வள அட்டை இயக்கத்தின் கீழ், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளாளப்பட்டியில், சராசரி மண்வள நிலையை விளக்கும் விளம்பரத் தட்டி, செயல் விளக்க மாதிரி கிராமங்களில், விவசாயிகள் அமைத்த செயல்விளக்கத் திடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மண் ஆய்வு பரிந்துரைப்படி, பயிருக்கேற்றவாறு உரமிட்டு, உரச்செலவினங்களை குறைத்து லாபம் அதிகரிப்பது, நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தை நிலை நிறுத்துவது, மண்ணின் கார அமிலத் தன்மையை சீர் செய்வது, பசுந்தாள் பயிர்கள் மூலம் மண்ணின் கனிம வளத்தைப் பெருக்குவது குறித்து, இணை இயக்குனர் சேகர், விவசாயிகளுக்கு விளக்கினார். அதையடுத்து, அரசநத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை விதைப்பண்ணை, மோகனூர் வேளாண் விரிவாக்க மைய கிடங்கு மற்றும் அலுவலக பணிகளை ஆய்வு செய்தார். சின்னப்பெத்தாம்பட்டி, பரளி, மாடகாசம்படடி, எஸ்.வாழவந்தி ஆகிய கிராமங்களில் உள்ள பயிர் அறுவடை பரிசோதனைகளான சோளம், 6 திடல்கள், நிலக்கடலை, 4 திடல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், எம்.எஸ்.டி.ஏ., திட்டத்தின் கீழ், குட்லாம்பாறை கிராமத்தில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டையையும் ஆய்வு செய்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வி, உதவி வேளாண் அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.