சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019
Advertisement
சொல்கிறார்கள்

தாராளமாக கிழங்குகளை சாப்பிடலாம்!

மண்ணுக்கு கீழே விளையும் அனைத்து கிழங்குகளும், வாயு கோளாறை ஏற்படுத்தும் என்பது சரி தானா; விளக்குகிறார், உடல் எடை குறைப்பு நிபுணர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்: உடல் நலக்குறைபாடு இருந்தால், கிழங்கு மட்டுமல்ல, சில காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எனினும், கிழங்கு மீது, நம் மக்களுக்கு இவ்வளவு கோபம் இருக்கக் கூடாது. அவர்கள் நினைப்பது போல, கிழங்குகள் அவ்வளவு மோசமானவை அல்ல.பல நாடுகளில், கிழங்குகள் தான், மக்களின் பிரதான உணவாகவே இருக்கின்றன. நம் நாட்டின் வட மாநிலங்களில், உருளைக் கிழங்கு இல்லாத உணவையே பார்க்க முடியாது. நொறுக்குத் தீனிகள் பல, உருளை அல்லது மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. ஜவ்வரிசியும், மரவள்ளிக் கிழங்கிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.எனவே, உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, பிடி கரணை, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம். 1 வயது குழந்தை முதல், முதியோர் வரை சாப்பிடலாம்; எந்த தவறும் இல்லை.கிழங்கு சாப்பிட்டால், குண்டாகி விடுவோம்; சர்க்கரை நோய் வரும் என, கூறுகின்றனர்; அது உண்மையில்லை. உடலுக்கு தேவையான பல சத்துகள், கிழங்கில் உள்ளன. 100 கிராம் கிழங்கில், 2௪ கிராம் தான் மாவுச்சத்து உள்ளது. முக்கால் பங்கு நீர்ச்சத்து, பொட்டாசியம், புரோட்டீன், விட்டமின், போலிக் ஆசிட், மைக்ரோ மினரல்கள், கால்சியம், நார்ச்சத்து உள்ளன. உருளைக் கிழங்குகள், வாயு கோளாறை உருவாக்குவதில்லை. மாறாக, நல்ல துாக்கத்திற்கு உதவும். அதை, எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து, உடல் எடை கூடுவதும், குறைவதும் உள்ளது. உருளைக் கிழங்கு, மூட்டு வலியைப் போக்கும். ரஷ்யாவில், 40 வயதைக் கடந்தவர்கள், உருளைக் கிழங்கை சாப்பிட்டால், ரத்தக்குழாய் அடைப்பு சீராகும் என, நம்புகின்றனர்.இந்த கிழங்கை அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். அதுபோலவே, சேனைக்கிழங்கில், கரோட்டனின், பொட்டாசியம், இரும்புச்சத்து, போலிக் ஆசிட், குரோமியம், புரோட்டீன் உள்ளன. பிடி கருணையில், நார்ச்சத்து மிகுந்து உள்ளது; மூல நோய்க்கு சிறந்தது. உண்மையில், சர்க்கரை வள்ளிக் கிழங்கை, சர்க்கரை நோய் கொல்லிக் கிழங்கு என்று தான் சொல்ல வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தாராளமாக சாப்பிடக் கூடிய கிழங்கு இது. சில வகை நோய்களுக்கு, கிழங்குகளை சாப்பிடக் கூடாது என, டாக்டர்கள் கூறினால் மட்டுமே புறக்கணிக்க வேண்டும்; இல்லையேல், தாராளமாக சாப்பிடலாம்!

காமராஜர் வீட்டை ஏலம் விட தமுக்கு அடிக்கப்பட்டது!

உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பின் தலைவர் பழ நெடுமாறன்: சென்னை, தி.நகரில், திருமலைப்பிள்ளை சாலையில், 8ம் எண் வீட்டில், மாதம், 250 ரூபாய் வாடகைக்கு, காமராஜர் குடியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயர், கோவிந்தராஜ்; காமராஜர் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த, 9ம் எண் வீட்டில், குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த இரண்டு வீடுகளை அடமானம் வைத்து, கோவிந்தராஜ் ஏராளமாக கடன் வாங்கியிருந்தார். அவருக்கு கடன் கொடுத்த, பாப்பா லால் என்ற மார்வாடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரண்டு வீடுகளையும் ஏலம் விட, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதை அறிவிக்கும் விதமாக, காமராஜர் குடியிருந்த, 8ம் எண் வீடு முன் நின்று, தமுக்கடித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

இதை அறிந்து, காமராஜர் வேதனை அடைந்தார். ஆனால், அந்த வீட்டில் தான், காமராஜர் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பது, பாப்பா லாலுக்கு தெரியாது. காமராஜர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த பாப்பா லால், காமராஜரின் நண்பரான தாமோதரனை சந்தித்து, 'அந்த வீட்டில், காமராஜர் குடியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது; தவறு நடந்து விட்டது. 'காமராஜருக்கே அந்த வீட்டை பத்திரம் போட்டுத் தர தயாராக இருக்கிறேன். ஏதாவது, ஒரு காசு போட்டு, பத்திரம் பண்ணுங்க' என்றார்.இந்த தகவலை, காமராஜரிடம் தாமோதரன் தெரிவித்தார். ஆனாலும், அந்த வீட்டில் குடியிருக்க பிடிக்காமல், வேறு வீட்டை வாடகைக்கு பார்க்குமாறு, கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். வேறு வீடு பார்க்க, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லை. காமராஜர் வசித்த அந்த வீடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. உலகத் தலைவர்கள், உள்நாட்டுத் தலைவர்கள் பலர், அந்த வீட்டிற்கு வந்து, காமராஜரை சந்தித்துள்ளனர். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சியே, அந்த வீட்டை வாங்கி விடுவது என, நிர்வாகிகள் விரும்பினர். அப்போது அந்த வீட்டின் விலை, 2.10 லட்சம் ரூபாய் தான். எனினும், காமராஜர் ஏற்கவில்லை. காமராஜரின் நண்பரான திருச்சி தாப்பா ரெட்டியார், அந்த வீட்டை, காமராஜருக்கு தானமாக வாங்கிக் கொடுக்க முன்வந்தார்; அதையும் காமராஜர் ஏற்கவில்லை. இதற்கிடையே, 'நவசக்தி' இதழ் சார்பில், அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என, முடிவானது; காமராஜர் ஏற்றுக் கொண்டார். வாங்குவதற்குள், காமராஜர் மறைந்து விட்டார். கடைசி வரை, வாடகை வீட்டில் வசித்த ஒரே தலைவர் அவர் தான். ஆனால், அவரின் முயற்சியால், சென்னை மற்றும் பிற இடங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் சேர்க்கப்பட்டன!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X