ஒரு மாவட்ட தலைநகரில், சமீபத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாளின் போது நிகழ்ந்த சம்பவம் இது. ஓராண்டுக்கும் மேலாகத் தீர்க்கப்படாத தன் குறையை, முதியவர் ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் வேதனையுடன் தெரியப்படுத்தினார்.
'முதியோர் ஓய்வுதியம் கேட்டு, எங்கள் பகுதி வருவாய் ஆய்வாளரிடம் மனு கொடுத்துள்ளேன். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, அந்த அலுவலர் கேட்ட பணத்தையும் கொடுத்து விட்டேன். 'இது வரை ஓய்வுதியம் வழங்கப்படவில்லை' என, அந்த முதியவர், மாவட்ட ஆட்சியரிடம் அப்பாவித்தனமாக கூறினார்.
முதியவர் புகார் மீது, மாவட்ட ஆட்சியர், என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை, அங்கிருந்த மக்கள் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்ட அலுவலரை, மாவட்ட ஆட்சியர் அழைத்தார்.'அந்த முதியவரிடம் பணம் பெற்றது உண்மைதானா?' என்றார் ஆட்சியர். 'பணம் வாங்கியது உண்மை தான். ஆனால், முதியோர் ஓய்வூதிய விதிகளின் கீழ் அவர் வராததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியவில்லை' என்று அந்த அலுவலர், பதிலளித்தார்.'அப்படியானால், முதியவரிடம் வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுங்கள்' என, மாவட்ட ஆட்சியர் ஆணையிட, அந்த அலுவலர், முதியவரிடம் பணத்தை ஒப்படைத்தார். இது, குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.'லஞ்சம் கொடுப்பதும் குற்றம்' என, அந்த முதியவருக்கு அறிவுரை கூறிய, மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
லஞ்சம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை அறிந்திருந்தும், பணம் வாங்கியதை, வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த அலுவலரின் செயல்பாடு, இன்றைய காலகட்டத்தில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும், சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் எளிதாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.லஞ்சம் வாங்கும் குற்றத்திற்குப் பணி நீக்கம் மட்டுமின்றி, சிறை தண்டனையும் கிடைக்கும் என்பதை, லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் நன்கு அறிவர். எனினும், தங்கு தடையின்றி எங்கும் லஞ்சம் உள்ளது.
அரசு அலுவலர்களின் தினசரி பணிகள் குறித்த, உயரதிகாரிகளின் ஆய்வு முறையாக நடைபெற்றால், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு இடமிருக்காது.லஞ்சம் மாதிரியான சமூக விரோத செயல்களுக்கு, எதிராகக் குரல் கொடுத்து, நாட்டின் பல பகுதிகளில், நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் வன்முறை குற்றங்களை நிகழ்த்தியதை நாடு அறியும்.இவர்களின் செயல்பாடுகள், கடந்த காலங்களில் மிகுந்திருந்த மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில், கடந்த மாதம் நிகழ்ந்த சம்பவம், அரசு அதிகாரிகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தன் அலுவலகத்தில், பணியில் இருந்த பெண் தாசில்தார் ஒருவரை அப்பகுதியைச் சார்ந்த நபர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அந்த பெண் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவரது உதவியாளர்களும் தீக்காயம் அடைந்தனர். தீ வைத்த அந்த நபரும், தீக்காயத்தால், மருத்துவமனையில் உயிரிழந்தார்.அந்த கொடுஞ்செயலைச் செய்த நபருக்கும், அவரது உறவினருக்கும் இடையேயான நிலப்பிரச்னையில், அந்த பெண் அதிகாரியின் செயல்பாடு மீது, அந்த நபர் சந்தேகம் கொண்டுள்ளார். அதன் பிறகே, இந்த கொடூரத் தாக்குதலை அந்த நபர் நடத்தியதோடு, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார் என்பது, புலன் விசாரணையில் தெரிய வந்தது.
அரசு அதிகாரி நேர்மையாக இருப்பதோடு மட்டுமின்றி, அவர் நேர்மையாளராக செயல்படுகிறார் என்பதையும், அவரது செயல்பாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், இந்த சம்பவம் உணர்த்துகிறது.பெண் தாசில்தார் தீக்கிரையான செய்தியின் நீட்சியாக, அந்த மாநிலத்தின் மின் விநியோகத் துறையில் பணியாற்றி வரும் பொறியாளர் ஒருவர், 'நான் ஊழல்வாதி அல்ல' என்ற பலகையை, அவரது அலுவலகத்தில் வைத்துள்ள செய்தியும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேர்மையான அதிகாரியாகப் பணியாற்ற விரும்பும், தன் நிலைப்பாட்டை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த, அம்மாதிரியான பலகையை, அந்த பொறியாளர் வைத்துள்ளார். எனினும், அவரது செயல், அவருடன் பணியாற்றும் மற்ற அலுவலர்களுக்கு, முன்மாதிரியாக அமையாமல், கசப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. லஞ்சத்தின் வேர், எந்த அளவிற்கு, சமுதாயத்தில் ஊடுருவியுள்ளது என்பதை இது உணர்த்துகிறது. தொன்மையான கலாசாரத்தையும், நீண்டதொரு பாரம்பரியத்தையும் கொண்ட நம் நாட்டில், நேர்மையான வாழ்வியல் முறை தான், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்பதை, உணர்த்தும் வகையில் பல நீதி நுால்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே படைக்கப்பட்டுள்ளன.
'வாய்மையே வெல்லும்' என்பது தான், நம் நாட்டின் சூளுரையாக உள்ளது.இருப்பினும், லஞ்சமும், ஊழலும், எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி, பெருகி வரும் நிலையில் தான், இன்றைய நம் சமுதாயம் பயணித்து வருகிறது.கற்றவர்களின் சதவீதம் அதிகரித்துள்ள இன்றைய சூழலில், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் சதவீதமும் அதிகரித்துள்ளது. லஞ்சம் பெறுவது, இழிவான செயல் என்றிருந்த நம் சமுதாயத்தில், பொது நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனி நபரின் நலனை மையப்படுத்தி, செயல்படும் நிலையை நோக்கி, பெருவாரியான அரசு அலுவலர்கள் பயணிக்கத் தொடங்கி விட்டனர்.
உலக நாடுகளில் லஞ்சமும், ஊழலும் எந்த அளவிற்கு வியாபித்துள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தும் சர்வதேச நிறுவனம், 2018-ம் ஆண்டில், 180 நாடுகளில் ஆய்வு நடத்தியது. அதில், லஞ்சமும், ஊழலும் அதிக அளவில் நடைபெறும் நாடுகளின் தர வரிசையில் இந்தியா, 78-வது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலேயே, சிறந்த கல்வித் திட்டத்தை நடைமுறைபடுத்தி வரும் நாடு என்ற பெருமையுடையது, ஐரோப்பிய நாடான பின்லாந்து. லஞ்சமும், ஊழலும் இல்லாத நாடுகள் வரிசையில், முன்னிலையில் இருந்து வருவதையும், இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
லஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வரும், சி.பி.ஐ., மற்றும் மாநிலங்களில் செயல்படும் ஊழல் தடுப்பு துறை மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, நாளுக்கு நாள் சரிவதைக் காண முடிகிறது.மக்களின் பார்வையில், லஞ்சம் வாங்கும் பல அதிகாரிகளின் செயல்பாடுகள், எவ்வித தடையுமின்றி நடைபெறுவதும், கை சுத்தமில்லாத சில அதிகாரிகள் ஊழல் தடுப்புத் துறையில் பணி புரிவதும், இத்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
லஞ்சம் மற்றும் ஊழல் செய்வோருக்கு எதிராக சட்டங்கள் இயற்றுவதாலோ, ஆண்டுக்கு ஒரு முறை விழிப்புணர்வு வார விழாக்கள் நடத்துவதாலோ, லஞ்சத்தையும், ஊழலையும், நாட்டிலிருந்து விரட்டி விட முடியாது. மாறாக, பொதுச் சொத்துக்கு ஆசைப்படாத, தலைமை பண்பு கொண்டோர், நிர்வாகத்திலும்,அரசு பணிகளிலும் அதிகரிக்க வேண்டும்.இதை உணர்த்தும் சம்பவம், 1914-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.
வழக்கறிஞராகப் பணியாற்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கு நிலவிய இன பாகுபாடு மற்றும் உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி போன்ற காரணங்களுக்காகப் போராட்டங்கள் பலவற்றை, அவர் முன்னின்று நடத்தினார்.தென் ஆப்ரிக்காவில், 21 ஆண்டுகள், பொது சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட காந்தி, இந்திய விடுதலை போராட்டங்களில் ஈடுபட விரும்பி, இந்தியா திரும்ப முடிவு செய்தார். அவரை வழியனுப்ப, தென் ஆப்பிரிக்காவில் விழா நடந்தது.அப்போது நிகழ்ந்த சம்பவம், ஓர் அரிய பாடத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்துகிறது.
தன் குடும்பத்துடன், இந்தியா திரும்பும் காந்திக்கு, வெள்ளி, தங்கம் மற்றும் வைர நகைகளை நினைவு பரிசாக தென் ஆப்பிரிக்கா மக்கள் வழங்கினர். அவரது மனைவி கஸ்துாரி பாய்க்கும், தங்க நெக்லஸ் ஒன்றை, பரிசாக வழங்கினர்.அவற்றை காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் தன் குடும்பத்திற்கு உரியவை அல்ல என்பதை, தன் மனைவிக்கு அவர் உணர்த்தினார். அந்த பரிசுகளை, தென் ஆப்பிரிக்கா மக்களின் நலனுக்காகப் பயன்படும் வகையில், அறக்கட்டளை ஒன்றிடம் ஒப்படைத்து, இந்தியா திரும்பினார்.
ஆனால், நம் நாட்டின் இன்றைய நிலை என்ன?தான் பணி புரியும் இடத்திலுள்ள செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் அன்பளிப்பு பெறுவதற்காகவே, இளம் அதிகாரிகள் பலர், அவர்களது குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களை நடத்துகின்றனர். இதன் மூலம் ஊழலுக்கான விதையைத் துாவி விடுகின்றனர்.அன்பளிப்பு என்பது, இனிப்பு முலாம் பூசப்பட்ட நஞ்சு என்பதையும், அது, சமுதாயத்தின் வளர்ச்சியையும், பொது நலனையும் சிதைத்து விடும் புற்றுநோய் என்பதையும், அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
தன் உடம்பிலிருந்து, மயிர் நீங்கினால், உயிர் வாழாத கவரி மானைப் போன்றோர், மானம் அழிய நேர்ந்தால், உயிரை விட்டு விடுவர் என்பது திருவள்ளுவர் காலத்து வாழ்க்கை முறை. இன்றைய கால கட்டத்தில், லஞ்சம் வாங்கியது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை, சட்டப்படி எதிர்கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை, சமுதாயத்தில் மேலோங்கி இருக்கிறது. மாறாக, லஞ்சம், ஊழல் இன்றி, மானத்தோடு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற உணர்வு, பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
நல்லொழுக்கத்தையும், நற்பெயரையும் ஈட்டுவதை விட, பணம் குவிப்பதிலேயே பெரும்பாலானோரின் கவனம் இருக்கிறது. படித்தவர்கள் மிகுந்துள்ள இன்றைய சமுதாயத்தில் இருந்து, சட்டத்தால் மட்டும், லஞ்சத்தையும், ஊழலையும் அகற்றி விட முடியாது. நேர்மையாளராக வாழ வேண்டும் என்ற உணர்வை, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை, ஊழலற்ற நாடுகள் உணர்த்துகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்; செயலாற்ற வேண்டும்.
தொடர்புக்கு:
பெ. கண்ணப்பன்
ஐ.பி.எஸ்., காவல் துறை, முன்னாள் தலைவர்
இ -- மெயில்: pkannappan29755@gmail.com