சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: உள்ளாட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., அரசுக்கு விருப்பம் இல்லை. ஆனால், நாங்கள் தான், உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறோம் என, மக்களிடம் தவறான தகவலை, முதல்வர் இ.பி.எஸ்., கூறி, பிரச்னையை திசைதிருப்பி வருகிறார்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், 'எங்க அப்பா, குதிருக்குள் இல்லை' என, சொல்வது போல உள்ளதே. உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., பிரதிநிதிகள், தேர்தல் வேண்டாம் என்ற ரீதியில் பேசியுள்ளனர்; உங்கள் கட்சி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, தேர்தலை தடுக்க, தி.மு.க., முயற்சிக்கிறது என்ற, இ.பி.எஸ்., 'டவுட்' உண்மை தானே!

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே: அதிபரானதும் முதன் முறையாக, இந்தியா வந்துள்ளேன். சிறப்பான வரவேற்பு அளித்த, இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் பதவிக்காலத்தில், இந்தியா - இலங்கை உறவை, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே, நீண்ட கால உறவு உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

'டவுட்' தனபாலு: இந்தியா - இலங்கை உறவை, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்பும், உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியதே. அதே நேரத்தில், உங்கள் நாட்டின் சிறுபான்மை மக்களான தமிழர்களை, மிரட்டும் வகையிலான, உங்கள் அரசின் செயல்பாடுகளை குறைத்து கொள்வீர்களா என்ற, 'டவுட்' இந்திய மக்களுக்கு உள்ளது. அந்த டவுட்டை, 'கிளியர்' பண்ணுங்க முதலில்!இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: அ.தி.மு.க., அரசின் திட்டங்கள், மக்களை சென்றடைந்துள்ளன; மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் விளைவாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தலை கண்டு அஞ்சுகிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு, அனைத்து பணிகளும் செய்து விட்டோம். இப்போது, உச்ச நீதிமன்றம் சென்று, தேர்தலை நிறுத்த யார் முயற்சிக்கின்றனர் என்பதை, மக்களே தெரிந்து கொள்ளட்டும்.

'டவுட்' தனபாலு: மொத்தத்தில், உங்கள் இரு கட்சிகளின் மோதல், உச்ச நீதிமன்றம் வரை சென்று விட்டது. இதனால், இந்த முறையும் உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தில் நடப்பது சந்தேகமே என, மக்கள் பேசத் துவங்கி விட்டனர். கோர்ட்டுக்கு, தி.மு.க., சென்றுள்ள நிலையில், தேர்தலை சந்திக்க, தி.மு.க.,வை போல பயந்து, உங்கள் அரசும் வழக்கறிஞர்களை, உசுப்பேற்றி விடாதோ என்ற, 'டவுட்'டும், மக்களுக்கு வந்துள்ளது.lll

தமிழக காங்., தலைவர் அழகிரி: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது பொய் வழக்கு போட்டு, நுாறு நாட்களுக்கும் மேலாக, சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சமீபத்தில், நீதிமன்ற விசாரணைக்கு சிதம்பரம் வந்த போது, அவர் முகத்தில், எவ்வித சோர்வும் காணப்படவில்லை. மிகவும் மன உறுதியோடு இருக்கிறார் என, அவரை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

'டவுட்' தனபாலு: நீங்க சொல்றதைப் பார்த்தால், இன்னும், 100 நாட்கள் அவரை, 'உள்ளே' வைத்திருந்தாலும், தாங்குவார் என்பது போல் அல்லவா உள்ளது... மேலும், சிதம்பரத்தை வெளியே விட வேண்டாம் என, மறைமுகமாக சொல்கிறீர்களோ என்ற, 'டவுட்'டையும் ஏற்படுத்துகிறது. அவரை வெளியே விட வேண்டுமா, வேண்டாமா; முதலில், இந்த டவுட்டை, 'கிளியர்' பண்ணுங்க!

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒன்றும் தெரியாத, சின்ன குழந்தை போல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இன்னும் அவர், அரசியலில், 'பேபி'யாகவே உள்ளார். துணை முதல்வராக இருந்தவர்; பல பொறுப்புகளை வகித்தவர்; சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும், '60 வயதிற்கு மேல் குழந்தை' என்பது போல் குழந்தையாகி விட்டாரே!
'டவுட்' தனபாலு: அந்த சின்னக் குழந்தையையா, தலைவராக, தி.மு.க., வைத்துள்ளது என்ற, 'டவுட்' உங்கள் பேட்டியின் மூலம் எழுகிறது. பல பேரன்களுக்கு, தாத்தா ஆகி விட்ட அவரை, பேபி என்கிறீர்கள். அ.தி.மு.க.,வில் நீங்கள் உட்பட பலருக்கும், வயது, 60க்கு மேலாகிறது. யாராவது, உங்க கட்சிக்காரங்களையோ, உங்களையோ குறை சொன்னா, 'போ... என்னை குறை சொல்லாதே... நீதான் லுாசு...' என்பது போல், உடனுக்குடன் தர்க்கம் செய்யிறீங்களே... இது குழந்தைத்தனம் இல்லையாங்கற, 'டவுட்' ஏற்படுதே!

பத்திரிகை செய்தி: தினகரன் தலைமையிலான, அ.ம.மு.க.,வை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தடை கோரி, தினகரனின், 'வலது கரம்' போல விளங்கிய புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 'அக்கட்சியை பதிவு செய்ய, பிரமாணப்பத்திரம் அளித்திருந்த, 14 பேர், தற்போது அந்த கட்சியில் இல்லை. எனவே, அக்கட்சியை பதிவு செய்யக் கூடாது' என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

'டவுட்' தனபாலு: அரசியலில் நெருங்கிய நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது, புகழேந்தியின் செயலால் புரிகிறது. அவர் சொல்றதைப் பார்த்தால், தினகரன் கட்சியில் இப்போது யாருமே இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே! அது இருக்கட்டும்... இவர் இப்படி, 'நுங்கு' எடுக்கிறதைப் பார்த்தா, தனிப்பட்ட முறையிலே, தினகரனுக்கும், இவருக்கும், 'டீலிங்' ஒத்துப் போகாம போச்சோன்னு, 'டவுட்' வருதே...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X