சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'நல்ல முயற்சி தான். தாராளமா பண்ணுங்க...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பேச்சு: தமிழக பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறை குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலம், அவர்களின் பெற்றோருக்கு, நேர்மையான தேர்தல், கட்டாய ஓட்டுப்பதிவு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

'எந்த காலத்திலோ நடந்ததாக கூறப்படுவதை, இப்போ நடந்தது போல, இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் சொல்லி, பிரிவினைவாதம் பேசுவீர்களோ தெரியவில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு: ஒரு காலத்தில், நமக்கு படிப்பு வராது என்றனர். படிக்கக் கூடாத மக்கள் என்றனர். ஜாதி காரணமாக, மனு தர்மம் காரணமாக படிக்க விடவில்லை. மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தலாம் என, சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்; வெற்றி பெறக் கூடாது.

'உங்களின் கோரிக்கையை, முறைப்படி, தமிழக அரசிடம் தெரிவியுங்க...' என, கூறும் வகையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு அறிக்கை: எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோருக்கு, முன்ஜாமின் வழங்கலாம் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரானது. எனவே, தமிழக அரசு மேல் முறையீடு செய்து, எங்கள் பிரிவினர் நலனை பாதுகாக்க வேண்டும்.
'உண்மையில், பாராட்டுக்குரியவர் சின்னப்பிள்ளை..' என, சொல்லத் தோன்றும் வகையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ராகேஷ்குமார் பேச்சு: மத்திய அரசின், 'பத்மஸ்ரீ' விருது பெற்றுள்ள சின்னப்பிள்ளை, இரும்புப் பெண்மணி. தன்னலமற்றவர். தன்னைச் சுற்றி உள்ள மக்கள், கிராமப்புற பெண்களின் துயரங்களை உடைத்தெறிந்து, அவர்களின் வெற்றிக்கு வித்திட்டவர்.
'அப்பப்ப நியாயமாகவும் சிலர், உங்கள் கட்சியில் பேசுவாங்க போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் கோவிந்தன் பேச்சு: பார்லிமென்ட் ஜனநாயகம் சிறப்பாக உள்ள நம் நாட்டில், ஆயுத புரட்சிக்கான அழைப்பு தவறானது. மாவோயிசம் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி, காடுகளில் ஆயுதம் ஏந்தி திரியும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு, சீனத் தலைவர் மாவோ பெயரை உச்சரிக்கவே தகுதியில்லை.
'ஜெயலலிதாவின் கனவுகளை நீங்கள் நன்றாக அறிந்துள்ளீர்கள் போலிருக்கிறதே...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேச்சு: தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக, அடுக்கடுக்காக பல திட்டங்களை அறிவித்து, ஜெயலலிதாவின் கனவை, முதல்வர் இ.பி.எஸ்., நிறைவேற்றி வருகிறார். ஜெ., ஆசியுடன், இந்த செயல்களை, முதல்வர் இ.பி.எஸ்., செய்து வருகிறார்.

'நல்ல செயல்; பாராட்டுகள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக, அகர முதலி திட்ட இயக்க இயக்குனர் காமராஜ் பேச்சு: தமிழின் சொற்கள், பத்து லட்சமாக கண்டறிந்துள்ளோம். அவற்றை தொகுத்து, சொற்குவை என்ற தொகுப்பை உருவாக்கியுள்ளோம். அதை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறோம். இணையத்தில் தமிழை நிலைபெறச் செய்ய, புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகிறோம்.

'எவ்வளவு நிலம் கைவசம் உள்ளது என்ற விபரமே தெரியாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு தானம் வழங்க, அறநிலையத்துறை தயாராகி விட்டதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில், ஹிந்து கோவில்களுக்கு, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக, அறநிலையத்துறை கூறுகிறது. ஆனால், 15 லட்சம் ஏக்கர் இருக்கும் என கருதுகிறோம். ஆக்கிரமிப்பில் உள்ள, 1 லட்சம் ஏக்கர் நிலங்கள், அடுத்த ஆண்டிற்குள் மீட்கப்படும். கோவில் நிலங்களை யாருக்கும், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியாது.

'தி.மு.க., வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் நடப்பதே, சந்தேகத்திற்கு இடமாக மாறி உள்ளதே... அதன் பிறகல்லவா, தில்லுமுல்லு பற்றி யோசிக்க வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என, சட்டசபையில், அ.தி.மு.க., அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், தற்போது, மறைமுக தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, தில்லுமுல்லு செய்து, தேர்தலை தடுப்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது.

'வெங்காயத்தை எங்கெங்கு பதுக்கியுள்ளனர் என சொன்னால், இன்னும் கொஞ்சம் லேசாக இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: வெங்காயம் விலை, கிலோ, 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதை தவிர்க்க, வெங்காயம் பதுக்கல்காரர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷன் கடை மூலம், குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'தமிழகத்தின், 'தன்னிகரற்ற' தலைவராக, இ.பி.எஸ்., உருவாகி வருகிறார் என, சொல்லுங்க...' என, ஜாடை மாடையாக கூறத் தோன்றும் வகையில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி: ஜெ.,க்கு பின், தமிழக மக்கள் மனதில், முதல்வர் பழனிசாமி இடம் பிடித்து விட்டார். தி.மு.க.,வை மக்கள் மறந்து விடுவர் என்பதால், அதன் தலைவர் ஸ்டாலின், ஏதேதோ பேசி வருகிறார். கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றது போல, உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X