மஹா., அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மஹா., அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை!

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
 மஹா., அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை!

சீதா ராமநாதன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறும் அரசியல் கோமாளி தனம் குறித்து, வாசகர் ஒருவர், இதே பகுதியில் நன்றாக விவரித்து இருந்தார்; அவருக்கு என் பாராட்டுக்கள்!கர்நாடக அரசியலில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, சரியான தீர்ப்பு கொடுத்து அக்கிரமம் நடக்காமல் தடுத்தது. அதே போல், இன்று மஹாராஷ்டிரா பிரச்னையிலும் சரியான தீர்ப்பு கொடுத்து, அதன் மதிப்பை, நாட்டு மக்களிடம் பல மடங்கு உயர்த்தி உள்ளது.தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தது, சிவசேனா; பின், அந்த கட்சி விதித்த நிபந்தனைகள் நேர்மையானவை அல்ல.'மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வகுத்த திட்டம், இம்மி அளவும் நிறைவேறவில்லை.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், 'எங்கள் ஆட்சியில், லஞ்சம், ஊழல் இல்லை' என, பெருமிதத்துடன் மார்தட்டி கூறுகிறார், பிரதமர் மோடி.அவரின் அனுமதி இல்லாமல், எண்ணற்ற ஊழல் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த, அஜித் பவாரை, துணை முதல்வராக, எப்படி ஏற்று கொண்டார்...இதை விட வேதனை... துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்த சிறிது நேரத்திலேயே, அஜித் பவார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த, எண்ணற்ற வழக்குகள் விடுவிக்கப்பட்டன.'வெளி நாடுகளில் இந்தியா மதிப்பு உயர்ந்து வருகிறது' என, பெருமிதத்துடன் கூறும், பிரதமர் மோடிக்கு, உள் நாட்டு அரசியலில், 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என எடுக்கப்படும் நேர்மையில்லாத முடிவுகளால், கிடைப்பது ஏமாற்றமே!நீண்ட காலம் அரசியல் அனுபவம் இருந்தும், அரசியல் முதிர்ச்சி இல்லாத காரணத்தால், பல மாநிலங்களில் ஆட்சி பொறுப்பை, பா.ஜ., இழந்துள்ளது.பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும், மஹாராஷ்டிராவுக்கும், தங்களுக்கும், எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நடிப்பது, விந்தையிலும் பெரிய விந்தை.மாநில அரசுகளுக்கு, முன் உதாரணமாக இருக்க வேண்டிய, மத்திய அரசே, இது போன்ற கீழ்த்தரமான போக்கால், உள் நாட்டில் மதிப்பு வேகமாக சரிவதை உணர்வரா அல்லது 'அரசியலில், இதெல்லாம் சகஜம்; வெட்கப்பட என்ன இருக்கிறது' என, சிரித்து சமாளிப்பரா?மஹாராஷ்டிரா அரசியல் சதுரங்க ஆட்டத்தை, தமிழக வாசகர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் விதத்தில், 'தினமலர்' நாளிதழில் எழுதப்பட்டுள்ளது. மறைந்த சோ கூறியது போல், மஹாராஷ்டிராவில், எந்த அரசியல்வாதிக்கும் வெட்கமில்லை!

வரலாற்றைபுரட்டி பாருங்கள்இளைஞர்களே!

கே.சிங்காரம், தலைவர், நகர காங்கிரஸ் கமிட்டி, வெண்ணந்துார், நாமக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து தீவிரமாக போராடிய தலைவர்களில், வ.உ.சிதம்பரம் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.நல்ல நிலையில் வாழ்ந்து வந்த காலத்தில், தேச நலனுக்காக, தன் குடும்பச் சொத்துகளை இழந்தார். சிறையில் மாடுகள் போல், செக்கிழுத்தார்; தடியடி வாங்கினார்.ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றை உருவாக்க, வ.உ.சி., திட்டமிட்டார். அதற்காக நாட்டுப்பற்றுள்ள பல தலைவர்களை சந்தித்து, நிதியுதவி பெற்றார். ஒரு பங்கு, 25 ரூபாய் என, நிர்ணயம் செய்து, 40 ஆயிரம் பங்குகளை விற்று, 10 லட்சம் ரூபாய் திரட்டினார். முறைப்படி கப்பல் கம்பெனியை பதிவு செய்தார்; இரண்டு கப்பல்களை வாங்கி வந்தார்.துாத்துக்குடிக்கும்,இலங்கைக்கும் கப்பல் போக்குவரத்து துவங்கியது. சிறப்பாக வாணிபத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதைக் கண்ட ஆங்கிலேய அரசு, பல தொல்லைகளையும், இடர்பாடுகளையும் கொடுத்தது.ஆங்கிலேய அரசை எதிர்த்து, பல போராட்டங்கள் நடத்தினார். ஆங்கிலேய அரசு, அவரை கைது செய்து ஆயுள் தண்டனை வழங்கியது. துன்பங்களை கண்டு சிறிதும் துவளாமல், நாட்டு விடுதலையே உயிர் மூச்சாக கொண்டு செயலாற்றினார்.இவரைப் போலவே பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த, பகத்சிங் எனும் இளைஞர், நாட்டின் விடுதலைக்காக, எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடினார்.இதை பொறுத்துக் கொள்ள இயலாத ஆங்கிலேய அரசு, பகத்சிங்கிற்கு துாக்கு தண்டனை வழங்கியது. அதை கண்டு சிறிதும் துன்பம் அடையவில்லை. துாக்கிலிட சில மணித்துளிகள் இருக்கும் போது, லெனின் வரலாறு நுாலை வாசித்துக் கொண்டிருந்தார்.துாக்கிலிடும் போது, கண்களை கருப்புத் துணியால் மூடும் வழக்கத்துக்கு மாறாக, 'என் தாய் நாட்டைப் பார்த்தபடியே என் உயிர் போகட்டும்' என்றார், பகத்சிங்.உயிர் போகும் நிலையிலும் கூட, துன்பம் அடையாமல், துவளாமல், தியாக வரலாறு படைத்த மாவீரன் பகத்சிங், பெருந்தலைவர் வ.உ.சி., வரலாற்றை, நம் இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும்!

நேரத்தைவீணடிக்கும்அமைச்சர்கள்!

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: வடசென்னையில், குடிசை மாற்று வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதென தினசரி செய்திகளில் பார்க்கிறோம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில், பல கிராமங்களில், இறந்து போன சடலங்களை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாமல், ஆற்றில் நீந்தி எடுத்துச் செல்லும் பரிதாப நிலை உள்ளது.பள்ளி மாணவ - மாணவியர் ஆற்றை தாண்டி பள்ளிக்கு செல்கின்றனர். பல பள்ளிகளுக்கு மேற்கூரை இல்லை. இவை எல்லாம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற மக்களின் அடிப்படை தேவைகள் ஏராளமாக உள்ளன. இதை எல்லாம், அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை அழைத்துச் சென்று, நேரில் போய் மக்கள் குறைகளை போக்குங்கள்.தமிழக அமைச்சர்கள் சிலர், பேசி பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். தினமும் நடக்கும் அரசியல் சூழ்நிலை விஷயங்களை பற்றி, மீடியாக்கள் குறிப்பிட்ட சில அமைச்சர்களை குறி வைத்து, கேள்விகள் கேட்கின்றனர்.அமைச்சர்களின் பதில்களை, சிரிப்பு நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றோர் நடித்துள்ள காட்சிகளோடு ஒப்பிடுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு அமைச்சர்கள், இப்படி காமெடி நடிகர்களோடு சித்தரிக்கப்படுவதை பார்த்து மிகவும் வேதனையாக உள்ளது.'அந்த விஷயத்தை எப்படி பார்க்கிறீங்க!' 'இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறீங்க?' என்று, இப்படி கேள்வி கேட்கும் மீடியாக்களுக்கு நன்றாக நேரம் போகிறது. மீடியா கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்களும் உற்சாகமாக, பல உதாரணங்களை கூறி, அனைவரையும் சிரிக்க வைக்கின்றனர். அது மட்டுமல்லாமல், பல மீடியாக்களில், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தனி நேரத்தை ஒதுக்குகின்றனர்.அமைச்சர்களே...மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே உள்ளது. மீடியாக்களிடம் பேசும் நேரத்தை தவிர்த்து, உங்கள் தொகுதியில் இருக்கும் மக்களிடம் போய் பேசுங்கள்.தமிழக மக்கள் மட்டுமல்ல, உலக முழுவதும் வசிக்கும் தமிழர்கள், உங்கள் பேச்சுகளை, கவனிக்கின்றனர் என்பதை, மறந்து விட வேண்டாம்!


ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் தெரிந்து கொள்ளணும்!

சுப்ர.அனந்தராமன், சின்னகாஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
பிராமணர்களின் மொழி சமஸ்கிருதம் என்ற தவறான அபிப்பிராயம் தமிழ் சமுதாயத்தில் பரவியிருக்கிறது. அதுபோல, வேத மந்திரங்களை கற்பது, ஸ்ரீருத்ரம், சமகம் புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் ஆகியவற்றை பாராயணம் செய்வதும், பிராமண ஜாதியினருக்கே உரியது என்ற தவறான எண்ணமும், தமிழ் சமுதாயத்தில் பரவி இருக்கிறது.நான், எட்டு ஆண்டுகள், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, தெய்வீக உறைவிடமாகிய புட்டபர்த்தியில் வசித்து உள்ளேன். அங்கு, சாய் குல்வந்த் ஹால் என்ற ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் நீள, அகலம் கொண்ட விஸ்தாரமான பிரார்த்தனை மண்டபம் உள்ளது.அதில், காலை, மாலையும் பல நுாறு பேர், எல்லா ஜாதிகளையும் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், வேத பாராயணம் செய்வதை பார்த்து இருக்கிறேன். வேத மந்திரங்களை கற்று, பாராயணம் செய்ய, ஜாதிகளைக் கடந்து, எல்லா மக்களுக்கும் உரிமை இருக்கிறது.இதில், வியப்புக்குரியது என்னவென்றால், பல அரபு நாட்டு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தோரும் கூட, சாய் குல்வந்த் ஹாலில், ஸ்ரீருத்ரம், சமகம், பருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், ஸ்ரீஸூக்தம் போன்ற, பல வேத மந்திரங்களை பாராயணம் செய்கின்றனர்.இந்த உண்மையை, தமிழகத்தில் வாழும் ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அச்சுத பிஷாரோடி என்பவர், நாராயண பட்டதிரி என்ற நம்பூதிரி, பிராமணருக்கு சமஸ்கிருத இலக்கணம் கற்பித்தவர்; அவர் பிராமணர் அல்லாதவர்.கேரள மாநிலத்தில் எல்லா ஜாதி மக்களும், குறிப்பாக, பெண்கள் தினமும் வீட்டில் ஸ்ரீமந் நாராயணியம் செய்யுளை பாராயணம் செய்கின்றனர். ஆதிசங்கரர் அவதரித்த, கேரளாவின் காலடி என்ற ஊரில் அமைந்துள்ள, சங்கராச்சாரிய பல்கலையில், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் கூட சமஸ்கிருத மொழி கற்பிக்கும் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.'ரசனா' என்ற சமஸ்கிருத மாத இதழில், இவர்களில் சிலர், ரிக்வேதம் பற்றி சமஸ்கிருத மொழியில் கட்டுரைகள் எழுதுகின்றனர். வலைதளத்தில் தேடினால், இதுபற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்!

தமிழக வரலாற்றில்எந்த ஒரு நடிகரும்முதல்வராக முடியாது!

ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
'சினிமா என்ற மாயையில் இருந்து விடுபடாமல் இருப்பது, தமிழகத்திற்கு பிடித்த சாபக்கேடு' என, வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அவரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்...சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சீமான் போன்றோர், திரையுலகை சார்ந்தோர். இவர்கள் எல்லாரும் கட்சி ஆரம்பித்தனர். ஏன், முதல்வராக முடியவில்லை. மக்கள் ஏன், இவர்களை முதல்வராக ஏற்றுக் கொள்ளவில்லை.கவர்ச்சிக்கு மக்கள் மயங்குகின்றனர் என்றால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கமல் கட்சி, அனைத்து தொகுதிகளிலும், தன் வேட்பாளர்களை நிறுத்தியது. ஏன், ஒரு தொகுதியில் கூட, வெற்றி பெற முடியவில்லை.எம்.ஜி.ஆரை மட்டும் ஏற்று, நான்கு முறை தமிழக முதல்வராக ஆக்கினரே, மக்கள்; அவர் நடிகர் என்பதற்காக மட்டும் அல்ல; அவர், 'ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்' என, என்றும் புகழப்படுபவர்.அவர் மறைந்து, 32 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் மக்கள் நினைவு கூர்கின்றனர். அதற்கு, அவரின் மனித நேயம் தான் காரணம். இப்படி, வாரி வாரி வழங்கிய காரணத்தால் தான், கிருபானந்தவாரியார், 'பொன்மனச் செம்மல்' என்ற பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கினார்.'சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தி, தேர்தல் பிரசாரம் செய்து, அரசியலை அசிங்கப்படுத்திய பெருமைக்குரியவர், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. 'ராமச்சந்திரா உன் முகத்திற்கே லட்சக்கணக்கான ஓட்டுகள் விழும்' என எம்.ஜி.ஆரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, ஆட்சியை பிடித்தார், என்கிறார், வாசகர்.'எம்.ஜி.ஆரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, ஆட்சியை பிடிக்க வேண்டிய அவசியம் அண்ணாதுரைக்கு இல்லை.முதல்வர் கனவோடு அரசியலுக்கு நுழைந்த கமல், நுழைய காத்திருக்கும், ரஜினி, விஜய் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள்...இந்த நாட்டு மக்களுக்கு, எம்.ஜி.ஆர்., வழங்கிய நன்கொடைகள், காலத்தினாற் செய்த உதவி ஆகியவற்றை நீண்ட பட்டியல் இடலாம். அதுபோல, நீங்கள், என்ன செய்தீர்கள், தமிழக மக்களுக்கு... உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்., தான். அவர் ஒரு சகாப்தம். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தமிழக வரலாற்றில் இனி, எந்த ஒரு நடிகரும் முதல்வராக முடியாது!

பாலியல் குற்றம் தடுக்கவளைகுடா சட்டத்தைஅமல்படுத்தணும்!

க.அர்ஜுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்:
நம் நாட்டில், அவமானம், கவுரவம் என கருதி, பல பாலியல் குற்றங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.வளைகுடா நாடுகளில், பெண்களுக்கு எதிரான, குறிப்பாக பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு, கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில், பாலியல் பலாத்காரம் நடந்த நான்காவது நாளில், குற்றவாளியின் தலையில் துப்பாக்கியால் சுட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்டில், சம்பவம் நடந்து ஏழாவது நாளில், துாக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. எகிப்தில் துாக்குத் தண்டனை; ஈரானில் சவுக்கடி; சவுதி அரேபியாவில் குற்றவாளி வேதனையை அனுபவித்து மரணிக்கும் வகையில், அவர் மீது கற்களை எறிந்து, தண்டனை நிறைவேற்றப்படுகிறது.நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உறைவிடமாக, உ.பி., மாநிலம் உள்ளது. 2017ல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் எண்ணிக்கை, 5,397. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டோர், 1,587. ஊடக செய்திகளைப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கை, உ.பி., மாநிலத்தை விட குறைவு.'இரவில் ஒரு பெண், அச்சமின்றி தனியாக ரோட்டில் நடந்து செல்லும் நிலை வந்தால் தான், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கான இலக்கை அடைந்ததாக நாம் கூற முடியும்' என்றார் மஹாத்மா காந்தி.அத்தகைய நிலையை அடைந்துள்ளோமா என்பது, நம்மிடம் இன்று வரை எழுந்துள்ள கேள்வி.கடந்த, 2012ல், நாகை மாவட்டத்தில், பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் அளித்த ஆயுள் தண்டனையை, சமீபத்தில் உறுதி செய்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், எஸ்.வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.'கடுமையான சட்டங்கள், அபராதம் விதிப்பது, இடைவெளியின்றி விரைவில் நீதி வழங்கி, தண்டனையை நிறைவேற்றுவதின் வாயிலாக, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களை தடுக்க முடியும்' என, மகத்தான தீர்ப்பு அளித்த, நீதிபதிகளை மதிப்போம்.இவைகளை கருத்தில் கொண்டு, இருக்கும் சட்டங்களை, மறு ஆய்வு செய்து, விரைவான நீதி, கடுமையான தண்டனை நிறைவேற்றினால், பாலியல் குற்றங்கள் குறையும்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X