உள்ளாட்சி தேர்தலில், தனித்துப் போட்டியிடுவது குறித்து, அ.தி.மு.க., தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேயர் உள்ளிட்டமுக்கிய பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடக்க இருப்பதால், கூட்டணி கட்சிகளின் தயவு தேவையில்லை என்றும், லோக்சபாதேர்தலில் இழந்த, ஓட்டு சதவீதத்தை தக்கவைக்க, தனித்துப் போட்டியிடுவதே கை கொடுக்கும் என்றும், அக்கட்சி கருதுகிறது.
கட்சி கட்டமைப்பு பலம், வேட்பாளர் சொந்த பலம், இரட்டை இலை சின்னம் தான் வெற்றிக்கு முக்கியம் என்பதால், 80 சதவீத இடங்களில்,அ.தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க., ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., ஐந்து தொகுதிகளிலும், தே.மு.தி.க., நான்கு தொகுதிகளிலும், த.மா.கா., புதிய தமிழகம், தலா, ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
மீதமுள்ள தொகுதி களில், அ.தி.மு.க., போட்டியிட்டது. இதில், தேனி தொகுதியில் மட்டும், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., போட்டியிட்ட, மற்ற தொகுதிகளில், 18.5 சதவீத ஓட்டுகள் தான், இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்தன.
ஆதரவு தேவையில்லை
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் இருந்த, அ.தி.மு.க.,வுக்கு குறைந்தபட்சம், 30 சதவீதம்; அதிகபட்சம், 40 சதவீதம் வரையும், ஓட்டு வங்கி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அ.தி.மு.க., வின் நிரந்தர ஓட்டு வங்கி யான, 30 சதவீத ஓட்டு களை பெறுவதற்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், புது வியூகம் வகுத்துள்ளனர்.அதாவது, உள்ளாட்சி தேர்தலில், நேரடி தேர்வு நடத்தினால், தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க.,வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு, அதிக பங்கீடு கொடுக்க வேண்டியநிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால், மறைமுக தேர்தல் நடத்தினால், கூட்டணி கட்சிகளின் தயவு, ஆதரவு தேவையில்லை. கட்சி கட்டமைப்பு பலம், இரட்டை இலை சின்னத்தின் பலம், வேட்பாளரின் சொந்த பலம், ஆளுங்கட்சி அதிகார பலத்தால், அ.தி.மு.க., சுலபமாக வெற்றி பெற முடியும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில், 80 சதவீத இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட்டால் தான், 30 சதவீத ஓட்டுகளை தக்க வைக்க முடியும்.
எனவே, மீதமுள்ள, 20 சதவீத இடங்களை, கூட்டணி கட்சிகளுக்கு, மாவட்ட வாரியாக வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் ஒதுக்கி தரலாம். இந்த முடிவை, கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொண்டால், கூட்டணியில் இருக்கட்டும்; விருப்பம் இல்லை என்றால், வெளியேறட்டும் என, ஆளுங்கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளது.
பேரம் பேச முடியாது
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டணி கட்சிகளுக்கு, 40 சதவீத பங்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள, 60 சதவீத இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட்டால், லோக்சபா தேர்தலில் கிடைத்த, 18.5 சதவீத ஓட்டுகள் தான், மீண்டும் கிடைக்கும்.எனவே, உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, 20 சதவீத பங்கீடு வழங்கினால் போதும். மீதமுள்ள, 80 சதவீத இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட்டால் தான், கட்சியின் நிரந்தர ஓட்டு வங்கியை நிலைநிறுத்த முடியும்.
இந்த ஓட்டு வங்கி தான், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும். கூட்டணி கட்சிகளும், அதிக சட்டசபை தொகுதிகளை கேட்டு, பேரம் பேச முடியாது. அ.தி.மு.க., மேலிடத்தின் முடிவு தெரிய வந்த பின், பா.ம.க., தரப்பில், தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிகிறது.
'பா.ம.க., ஆட்சியை பிடிக்க, என்னிடம் மந்திரம் உள்ளது' எனக் கூறி, அன்புமணி, தன்னை முன்னிலைப்படுத்தும் பணிகளில், மீண்டும் ஈடுபட்டுள்ளார். 'தமிழகம் முழுவதும், பா.ஜ., போட்டியிட விரும்புகிறது' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -