சென்னை:'உள்ளாட்சி தேர்தலை நிறுத்த, நீதிமன்றம் செல்லவில்லை. முறைப்படி நடத்தக் கோரியே, நீதிமன்றம் சென்றோம். சட்டத்தை மீறி, விதிகளுக்கு அப்பாற்பட்டு, தேர்தல் நடத்தும் சூழல் வந்தாலும், அதை சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவர் வெற்றி பெற்ற, சென்னை, கொளத்துார் தொகுதியில் நடந்து வரும் பணிகளை, நேற்று பார்வையிட்டார். அதன்பின், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:உண்மையை திரும்ப திரும்ப கூறினால், அது உண்மை என, ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், முதல்வர் இ.பி.எஸ்., பொய்யை, திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.உள்ளாட்சி தேர்தலை நிறுத்த, இ.பி.எஸ்., அரசு, பல்வேறு திட்டங்களை போட்டு வருகிறது. அதற்காக, பலரை மறைமுகமாக, நீதிமன்றத்திற்கு அனுப்பி கொண்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகளாக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்றம் சென்று, 'தேர்தலை எந்த காரணத்தினாலும் நிறுத்தக் கூடாது; நடத்தியே தீர வேண்டும். 'ஆனால், தேர்தலை நடத்தும் முன், பஞ்சாயத்து ராஜ் சட்ட ஷரத்துகள், இட ஒதுக்கீடு ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும்' என, கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதி மன்றம், 'இதையெல்லாம் முறைப்படுத்தி, தேர்தலை நடத்துங்கள்' என சொல்லி இருக்கிறது. தி.மு.க., தேர்தலை நிறுத்தியதாக சொல்லவில்லை. இதை, மக்கள் மன்றத்திலும், சட்டசபையிலும் பதிவு செய்துள்ளேன்.ஆனால், பத்திரிகைகள், தி.மு.க., தான் நீதிமன்றம் சென்று தடை பெற்று, தேர்தலை நிறுத்தி விட்டதாக, தவறான தகவலை பரப்புகின்றன. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால், அந்த புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இவற்றை முறைப்படுத்தி, அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. இவற்றை நிறைவேற்றி உள்ளனரா என்பது, என்னுடைய கேள்வி. இது குறித்து முதல்வர் சொல்ல வேண்டாம்; தேர்தல் ஆணையம் சொல்லலாம். அவர்களிடமிருந்தும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்திலும், தி.மு.க., சார்பில் வலியுறுத்த பட்டது; இதுவரைக்கும் பதில் இல்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, வெளிப்படைத் தன்மையோடு இல்லை. எனவே, நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது; தேர்தலை நிறுத்த செல்லவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தை கூட்டி, நாங்கள் தான் மனுக்கள் பெற்றுள்ளோம். எனவே, தேர்தல் நடத்த வேண்டும் என, குரல் கொடுத்து வருகிறோம்.
ஒருவேளை சட்டத்தை மீறி, விதிகளுக்கு அப்பாற்பட்டு, தேர்தல் நடத்தும் சூழல் வந்தாலும், அதை சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.