மும்பை:மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவியேற்றமூன்றாவது நாளிலேயே, முக்கிய பதவிகளை பெறுவதில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 'காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியை தரக்கூடாது' என, தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார், அடம் பிடிக்கிறார். சட்டசபையில் நேற்று நடந்தநம்பிக்கை ஓட்டெடுப்பில், உத்தவ் தாக்கரே வெற்றி பெற்ற நிலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல், மஹாராஷ்டிரா அரசியலில், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில், கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதிரடியான அரசியல் மாற்றங்களும், திருப்பங்களும் ஏற்பட்டன.மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு, பின் அது, வாபஸ் பெறப்பட்டது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இந்த திடீர் அரசு, நான்கு நாள் கூட நீடிக்கவில்லை. தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற முடியாததால், தேவேந்திர பட்னவிஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., ஆதரவுடன், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். மூன்று கட்சிகளையும் சேர்ந்த, தலா இருவர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்து முடிந்ததுமே, அமைச்சரவை விரிவு படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு களுக்கு இடையே, நேற்று, மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் துவங்கியது. இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட, தேசியவாத காங்கிரசின் திலீப் வாட்சே பாட்டீல், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கான அலுவல்களை துவங்கினார். பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிஸ், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,''எங்கள் கட்சியின் காளிதாஸ் கோலம்ப்கர், கவர்னரால், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு பதிலாக, வேறு ஒருவரை இடைக்கால சபாநாயகராக நியமித்துள்ளீர்கள். இது, அரசியல் சட்டத்துக்கு முரணானது. இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோல், இதற்கு முன் எப்போதும் நடந்தது இல்லை,'' என்றார். அவரது வாதத்தை நிராகரித்த இடைக்கால சபாநாயகர், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வின், 105 உறுப்பினர்களும், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே அரசு, 169 உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது. நான்கு உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்க வில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துணை முதல்வர் பதவியை பெறுவதில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், தன் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினருக்கு, துணை முதல்வர் பதவியை பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். காங்கிரசுக்கு, சபாநாயகர் பதவியை தரலாம் என்பதும், அவரது விருப்பம். ஆனால், காங்கிரஸ் மேலிடம், தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும், துணை முதல்வர் பதவியை தரும்படி பிடிவாதமாக கூறி வருகிறது.
'துணை முதல்வர் பதவியை பெற்றால் மட்டுமே, ஆட்சி, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும். எனவே, துணை முதல்வர் பதவி கட்டாயம் வேண்டும்' என, காங்., நிர்வாகிகள், கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், துணை முதல்வர் பதவியை தரும்படி, காங்கிரஸ் மேலிடம் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறது. ஆனால், 'காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியை தரக் கூடாது. சபாநாயகர் பதவியே போதும்' என, தேசியவாத காங்., கட்சியினர் அடம் பிடிக்கின்றனர்.
இது தவிர, அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, நிதி, வருவாய், நகர்ப்புற மேம்பாடு, கூட்டுறவு போன்ற இலாகாக்களை மூன்று கட்சிகளுமே குறி வைக்கின்றன. இதனால், அமைச்சரவையை விரிவு படுத்துவதில் தாமதமும், குழப்பமும் நிலவுகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே, கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
பிரச்னைக்கு தீர்வு காண, காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தரோட், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை நேற்று சந்தித்து பேசினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மஹாராஷ்டிரா அரசியல் துளிகள்* நம்பிக்கை ஓட்டு கோருவதற்காக நேற்று சட்டசபைக்கு வந்த, முதல்வர் உத்தவ் தாக்கரே, காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்* சட்டசபையில், முதல்வர் உத்தவ் தாக்கரேயும், முன்னாள் முதல்வர் பட்னவிசும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியது, உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
* உத்தவ் தாக்கரேயும், அவரது அமைச்சர்களும் பதவியேற்றபோது, உரிய சட்ட நடைமுறை களை பின்பற்றாமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியிடம், பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
* மஹாராஷ்டிரா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம், மும்பை, மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ளது. வர்ஷா என்ற பெயரில் செயல்படும் இந்த இல்லத்தில், உத்தவ் தாக்கரே குடியேற மாட்டார் என்றும், அவரது சொந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க, அவர் முடிவு செய்துள்ளதாக வும், சிவசேனா கட்சியினர் கூறுகின்றனர்
* மஹாராஷ்டிரா சட்டசபையின் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று நடக்கிறது. இதில், காங்கிரஸ் சார்பில் நானா படோலும், பா.ஜ., சார்பில் கிஷான் கதோரும், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது தான் நிம்மதி
உத்தவ் தாக்கரே பெருமூச்சுநம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற பின், முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:மஹாராஷ்டிரா மக்களின் ஆசி இல்லாவிட்டால், இந்த நம்பிக்கை ஒட்டெடுப்பில் வெற்றி பெற்றிருக்க முடியாது. சட்டசபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.இதுவரை, களத்தில் இருந்த அனுபவம் மட்டுமே எனக்கு உள்ளது. சட்டசபைக்கு வருவது, இது தான் முதல் முறை. எனவே, சபைக்கு வருவதற்கு முன், ஒருவித நெருக்கடி இருந்தது.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பின், இப்போது நிம்மதியாக உணர்கிறேன். நாங்கள், சத்ரபதி வீர சிவாஜி பெயரை கூறுவது, சிலருக்கு எரிச்சலாக உள்ளது. நாங்கள் திரும்ப திரும்ப அந்த பெயரைச் சொல்லுவோம். பெற்றோர் பெயரை கூறாத யாருக்கும், இந்த மண்ணில் வாழ்வதற்கு உரிமை இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
'பயப்படுகிறீர்களா?'
மஹாராஷ்டிரா சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன், பா.ஜ.,வின்தேவேந்திர பட்னவிஸ் பேசியதாவது:திடீரென சட்டசபையை கூட்டியுள்ளீர்கள்; இது, அரசியல் சட்ட விதி களுக்கு முரணானது. உரிய விதிமுறைகளின் படி, சட்டசபை கூட்டப்படவில்லை. கடந்த கூட்ட தொடரில், தேசிய கீதம் பாடப்பட்டு, காலவரையறையின்றி, சட்ட சபை ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு பின், உரிய விதிமுறைகளின்படி சபை கூட்டப்பட வேண்டும்!
அதேபோல், இடைக்கால சபாநாயகர் நியமனமும், சட்ட விதிகளுக்கு எதிராக நடந்துள்ளது. பா.ஜ.,வை பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்கள். அதனால் தான், இந்த அவசரம். இது குறித்து கவர்னரிடம் புகார் அளிப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.