சென்னை:மதுரையில் இந்த மாதம் நடக்க உள்ள, உலக தமிழிசை மாநாட்டுக்கு, 500 பேர் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனர்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், உலக தமிழ்ச் சங்கமும் இணைந்து, வரும், 14, 15ல், மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில், முதலாவது உலக தமிழிசை மாநாட்டை நடத்துகின்றன. தமிழிசையின் தொன்மையை ஆராய்தல், தமிழிசையின் தனித்தன்மையும், அதன் சிறப்பையும் வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டில், சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள, தமிழிசை கலைஞர்கள், அறிஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில், பாடல், நடனம், கருத்தரங்குகள், கவியரங்குகள், விவாதங்கள் உள்ளிட்டவை நடக்க உள்ளன.இம்மாநாட்டிற்காக, தமிழிசையில் நடனம், நாடகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருட்களில், 500க்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.