பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டும் மழையிலும் குவிந்தது மாணவர் கூட்டம்: 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் பெற்றோரும் ஆர்வம்

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019
Share
Advertisement
சென்னை:'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சியில், கொட்டும் மழையிலும், ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர், பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு, பொதுத்தேர்வில் வெற்றி பெறும் நுணுக்கங்கள் குறித்து, கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில்,
 கொட்டும் மழையிலும் குவிந்தது மாணவர் கூட்டம்: 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் பெற்றோரும் ஆர்வம்

சென்னை:'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சியில், கொட்டும் மழையிலும், ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர், பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு, பொதுத்தேர்வில் வெற்றி பெறும் நுணுக்கங்கள் குறித்து, கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டு தோறும், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், பள்ளி பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்று, அதிக மதிப்பெண் பெறும் வழிகளை விளக்குவர்.'சக்சஸ் மந்த்ரா'இந்த ஆண்டு, 'தினமலர்' நாளிதழுடன், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' பல்கலையும் இணைந்து, 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம், 2.0' என்ற நிகழ்ச்சி,தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் என, பல இடங்களில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, சென்னையில், சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி, நேற்று காலை, 9:30 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடந்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும், இடைவிடாத மழை பெய்தபோதும், மாணவ - மாணவியரும், பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும், காலை, 7:00 மணிக்கே, ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ - மாணவியர், பள்ளி சீருடையிலேயே நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். புதிய பாடத்திட்டம்தமிழக புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தக தயாரிப்பு குழுவின் தலைவராகவும், பள்ளிக்கல்வி துறையின் முன்னாள் செயலராகவும் பணியாற்றிய, தமிழக தொல்லியல் துறை கமிஷனர் உதயச்சந்திரன், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். புதிய பாடத்திட்டம் தயாரித்தது எப்படி; அதில் உள்ள முக்கிய பாடங்கள்; மற்ற பாட திட்டங்களை விட, தமிழக பாடத்திட்டத்தில் உள்ள தனித்தன்மை; மாணவர்களின் எதிர்காலத்துக்கு, புதிய பாடப் புத்தகத்தால் கிடைக்கும் நன்மைகள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற, புதிய பாடத்தின் பங்களிப்பு ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் சங்கர சரவணன், புதிய பாடத்திட்டங்களின் தயாரிப்பு, நோக்கம் மற்றும் அதில் மாணவர்கள் படிக்க வேண்டிய சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கினார். ஆரோக்கியம்அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்தின், பேராசிரியர் ஜெயகுமார் பங்கேற்று, மாணவர்கள், எதிர்காலத்தில் தேர்வு செய்ய வேண்டிய படிப்புகள், தற்போது வேலைவாய்ப்பை தரும் படிப்புகள், பிளஸ் 2வில் முடிவெடுக்க வேண்டிய முறை குறித்து, புள்ளிவிபரமாக எடுத்துரைத்தார்.

மாணவர்கள், கல்வியிலும், மனப்பாட திறன் மற்றும் சிந்தனை திறனிலும் சிறந்து விளங்கும் வகையில், ஆரோக்கியத்தை பேணும் முறையை, சித்த மருத்துவர் விக்ரம்குமார் விரிவாக விளக்கினார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில், மாணவர்களை உற்சாகப்படுத்தும், 'வீடியோ' ஒளிபரப்பப்பட்டது.'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் கல்வி மற்றும் சமூக பணிகள் குறித்தும், மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி குறித்தும், குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பாடக்குறிப்பு இலவசம்!

நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கலை பாட பிரிவுகளுக்கு, தனித்தனியே முக்கிய பாடக்குறிப்புகள் அடங்கிய, 'சக்சஸ் மந்த்ரா' கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், புதிய பாடத்திட்டத்தின் கீழ், பொதுத்தேர்வில், தங்கள் இலக்கை அடைவது எப்படி என்ற நுணுக்கங்களை, நிபுணர்கள் விளக்கினர். நிகழ்ச்சியின் இறுதியில், புதிய பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு, உதயச்சந்திரன், சங்கரசரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

பிடித்ததை படித்தால் இலக்கை அடையலாம்!
மாணவர்களுக்கு உதயச்சந்திரன் ஆலோசனை

''நினைத்த பாடம் கிடைக்காவிட்டாலும், பிடித்ததை விரும்பி படித்தால், வாழ்வில் பெரும் வெற்றி இலக்கை அடையலாம்,'' என, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன் ஆலோசனை கூறினார்.
'தினமலர்' நாளிதழின், 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோம், 2.0' நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக தொல்லியல் துறை கமிஷனரும், பள்ளிக்கல்வி துறை முன்னாள் செயலருமான உதயச்சந்திரன் பேசியதாவது:தமிழகத்தில், 12 ஆண்டுகளாக அமலில் இருந்த பழைய பாடத்திட்டத்தால், மாணவர்கள் உயர் கல்விக்கு சென்று தடுமாறுவதாக, என்னை சந்தித்து பேசினர். 'இந்த பாடத்திட்டத்தை மாற்றுங்கள்' என, முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையில் இருந்து உருவானது தான், பாடத்திட்ட மாற்றம். இந்த பாடத்திட்டத்தில், இவ்வளவு தகவல்கள் தேவையா என்ற கேள்வி எழுகிறது.யுத்த களத்தில், எதிரி எதை படிக்கிறாரோ, அதை விட அதிகமாக, நாம் படித்து தயாரானால் தான், வெற்றி கொள்ள முடியும். அதன்படி, தேசிய அளவில், போட்டி தேர்வுகளை சமாளிக்கும் வகையில், இந்த பாடப் புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் பலனை, நீங்கள் பிளஸ் 2 முடித்து, கல்லுாரிக்கு செல்லும் போது நிச்சயம் உணர்வீர்கள்.தேர்வுக்கான, 'ப்ளூ ப்ரின்ட்' இல்லை என, மாணவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். 'ப்ளூ பிரின்ட்' என்பது, வெறும் மதிப்பெண்ணை மட்டும் நிர்ணயிக்கும். அதை தாண்டி படிக்க வேண்டும். உயர் கல்வியில் உயர வேண்டும் என்றால், பாடங்களை புரிந்து படித்து, தெளிவு பெற வேண்டும்.உயர் கல்விக்கான வழிகாட்டி தகவல்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழக பாடப் புத்தகங்களில் தான் தரப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளை எட்டுவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில், வரலாறு, புவியியல் பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.மாணவர்கள் புரிந்து படித்து, தங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதும்போது, அவற்றிற்கு ஆசிரியர்கள் மதிப்பளிக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு சிவப்பு குறியீடு இடுவது, அவர்களின் ஊக்கத்தை குறைக்கும். புதிய பாடத்திட்டம், உங்களுக்கு கிடைத்த புதிய கருவி; பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. பெற்றோர், தாங்கள் நினைக்கும் படிப்பை, பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று, அழுத்தம் தர வேண்டாம். மாணவர்கள், தங்களுக்கு பிடிக்கும் படிப்பில் சேர, அனுமதிக்க வேண்டும். நினைத்த பாடப்பிரிவு கிடைக்காவிட்டாலும், பிடித்த பாடத்தை விரும்பி, கடினமாக படித்தால், வாழ்வில் உச்சத்தை அடையலாம். இதற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் உதாரணம். உங்களின் பொது தேர்வுக்கு மட்டுமின்றி, வாழ்க்கையின் வெற்றிக்கும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.பெற்றோரை நினைத்தால் வெற்றி!மாணவர்களின் கேள்விகளுக்கு, உதயச்சந்திரன் அளித்த பதில்கள்: உயர் கல்விக்கான கட்டணங்களுக்கு, கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித் தொகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஐ.ஏ.எஸ்., ஆவதற்கு, கல்லுாரியில் சேர்வதில் இருந்தே தயாராக வேண்டும். அதில் பாடங்களை தேர்வு செய்யும் விதம், 'ஸ்மார்ட்'டாக தயாராவது முக்கிய நடவடிக்கையாகும். சமூக நிகழ்வுகளை கண்டு, யாருக்கு கோபம் வருகிறதோ, அவர், ஐ.ஏ.எஸ்., ஆவதற்கு தகுதியானவர். எனவே, ரவுத்திரம் பழகுபவர், ஐ.ஏ.எஸ்., ஆகலாம்.
தொழில்நுட்ப படிப்புகள் மட்டுமே, சிறந்த பாடப் பிரிவுகள் என நினைக்க வேண்டாம். வரலாறு மற்றும் மானுடவியல் படிப்புகளுக்கு கல்வித் துறையிலும், மற்ற துறைகளிலும் அதிக தேவையுள்ளது.
புதிய பாடத்திட்டம், தேர்வுக்கான பாடத்திட்டம் மட்டும் அல்ல; வாழ்க்கைக்கான பாடத்திட்டம்.
தேர்வுக்கான வினாத்தாளில் என்ன இருக்கிறது என, குறிப்பாக பார்க்காமல், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் என்பதால், 'ப்ளூ பிரின்ட்' முறை நீக்கப்பட்டது. தேர்வில், வினா கேட்கும் முறையும், மதிப்பீடும் மாறினால், இன்னும் சிறந்த மாணவர்களாக நீங்கள் உருவாக முடியும்.
தேர்வானாலும், வாழ்க்கையானாலும், உங்களுக்கு மிகச்சிறந்த தன்னம்பிக்கையாளர் என்றால், அது உங்கள் பெற்றோர் தான்; அவர்களை நினையுங்கள். தன்னம்பிக்கையும், வெற்றியும் தானாக வரும்.இவ்வாறு, அவர் பதில்அளித்தார்.


புரிந்து படித்தால்ல வெற்றி பெறலாம்

''புதிய பாடத்திட்டத்தை, புரிந்து படித்தால், பொதுத்தேர்வு மட்டுமின்றி, போட்டி தேர்விலும் வெற்றி பெறலாம்,'' என, பேராசிரியர் சங்கரசரவணன் தெரிவித்தார்.'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம், 2.0' நிகழ்ச்சியில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் சங்கரசரவணன், புதிய பாடத்திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

மாணவ, மாணவியரின் கேள்விக்கு பதிலளித்து, சங்கரசரவணன் பேசியதாவது:பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம், அகில இந்திய அளவில், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கான போட்டி தேர்வுகளில், எளிதில் வெற்றி பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்விக்கும், கல்லுாரி கல்விக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் அடிப்படையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இதை பார்த்து அச்சப்பட வேண்டியதில்லை. இன்றைய தொழில்நுட்பம், தேவைகள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப, மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு பாடங்கள் சார்ந்த நிபுணர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து, கல்வித் துறையில் சிறந்த வல்லுனர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தி, பாடத்திட்டமும், புத்தகமும் தயாரிக்கப்பட்டது.இந்த பாடத்திட்டத்தை புரிந்து, மாணவர்களுக்கு, எளிதான முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து உள்ளோம். மாணவர்கள், எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், படிப்பு ஆர்வத்தை துாண்டும் வகையிலும், பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சராசரி மாணவனும் புரிந்து கொள்ளும் விதமாக, புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஞாபக சக்தியுடன் படித்தல், புரிந்து படித்தல், மனப்பாடம் செய்து படித்தல் ஆகிய மூன்று முறைகளையும், மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவர்கள், புதிய பாடத்திட்டங்கள் குறித்து, இணைய தளம், 'யூ டியூப் சேனல்' மற்றும் வீடியோ வழியாக அறிந்து கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம், ஒரு வரலாற்று வாய்ப்பு. முதன்முதலில், புதிய பாடத்திட்டத்தை படிக்க கூடிய இந்த வாய்ப்பு, நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. மாணவர்கள், பொது தேர்வை மட்டுமின்றி, உயர் கல்விக்கான போட்டி தேர்வுகளையும், எளிதாக சமாளிக்கும் வகையில், புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இதை கடினம் என்று நினைத்தால், எல்லாமே கடினம் தான்; எளிதாக நினைத்தால் எளிது. நாம் கஷ்டப்பட்டு படித்தால் தான், வாழக்கையில் முன்னேற முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.'உடல் ஆரோக்கியம் முக்கியம்!'

மாணவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து, சித்த மருத்துவர் விக்ரம்குமார் பேசியதாவது:மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதை போலவே, ஆரோக்கியமாக இருப்பதிலும், அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்தால், தேர்வுக்கு எளிதாக தயாராகி, அதிக மதிப்பெண் பெறலாம். பாரம்பரிய உணவு முறைகள், சிறுதானிய உணவுகளை மறந்து விட்டதால், உடல் நலத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுகின்றன. இளம் மாணவர்களுக்கும், நீரிழிவு நோய் வருகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறியதால், நோய்கள் அதிகரித்துள்ளன.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின், அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும். பழைய உணவை, 'பிரிஜில்' வைத்து சாப்பிடுவது கூடாது; நொறுங்க சாப்பிட வேண்டும். சப்பணங்கால் இட்டு தரையில் அமர்ந்து, சாப்பிட வேண்டும். அது தான் சீரான உணவாகவும், உடலை சீராக வைக்கவும் உதவும்.மாணவர்கள், காலை உணவை தவிர்க்கவே கூடாது. மதிய உணவில், அதிக காய்கறிகள், கீரை வகைகள் எடுத்து கொண்டால், ஞாபக திறன் சீரான வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 'உலகை ஆளும் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்!'அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயகுமார் பேசியதாவது:உலகில், 20 ஆயிரம் தொழில் துறைகள் உள்ளன. வாழ்வதற்கான கல்வியையும், வாழ்க்கைக்கான கல்வியையும் நாம் படிக்க வேண்டும். அதேபோல், படிக்கும்போதே மனிதாபிமானத்துடன் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். நல்லிணக்கத்தை வளர்க்கும் கல்வி நிறுவனங்களை, தேர்வு செய்ய வேண்டும்.தொழில்நுட்பங்கள், ஒவ்வொரு நாளும் மாறுகின்றன. எந்த தொழில்நுட்பம், வருங்காலங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை தெரிந்து, அதற்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்யலாம். உயர் கல்விக்கான தேசிய தரவரிசை பட்டியல், சர்வதேச கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில் இடம்பெறும் கல்லுாரிகளை ஆய்வு செய்யுங்கள்.விருப்பமான பாடத்தை தேர்வு செய்யுங்கள். அதேநேரம் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். எதுவெல்லாம் அடுத்து உலகை மாற்றும் என்பதை தெரிந்து, அதற்கேற்ற படிப்புகளை தேர்வு செய்யுங்கள். எல்லாவற்றிலும் மேலாக, நம் கலாசாரம், பண்பாட்டை கடைப்பிடிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.ஆசிரியர்கள், பெற்றோர், மாணவியர் பேட்டி...

புதிய பாடத்திட்டங்களை எப்படி அணுகுவது என்பதை தெரிந்து கொள்ள, இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. கல்வித் துறையில் அனுபவம் வாய்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரனின் உரை, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.-எஸ்.லதா, முதல்வர், பி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
பிளஸ் 2 படிக்கும், என் மகள் இலக்கியாவுக்காக, நிகழ்ச்சிக்கு வந்தேன். புதிய பாடத்திட்டம் குறித்து, என் மகள் பயந்ததை விட, நானும் அதிகமாக பயந்தேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தெளிவு கிடைத்துள்ளது. என் மகள், அதிக மதிப்பெண் பெறுவார் என்ற நம்பிக்கையுடனும், மன நிறைவுடனும் செல்கிறேன்.-எஸ்.தனசேகர், திருவொற்றியூர்.
புதிய பாடத்திட்டங்கள் குறித்த சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. அனைத்து மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக நிகழ்ச்சி அமைந்தது.-டி. சுமதி, திருவொற்றியூர்Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X