கனவு நனவாகும்! விளைபொருள் மதிப்புக்கூட்டு மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனவு நனவாகும்! விளைபொருள் மதிப்புக்கூட்டு மையம்

Added : நவ 30, 2019

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில், 13.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, விளைபொருட்கள் பதப்படுத்துதல் மையங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இதன்மூலம், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரும், விவசாயிகளின் கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் விவசாய விளைபொருட்களை பதப்படுத்தவும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், தரம்பிரிக்கவும் தேவையான வசதிகள் இல்லை. இதனால், விவசாயிகள், நுகர்வோர் என இரு தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர்.இக்குறையை போக்கும் வகையில், மாநிலம் முழுக்க மதிப்புக்கூட்டுதல், தரம் பிரித்தல், முதல் நிலை பதப்படுத்துதல் ஆகிய பயன்பாடுகளுக்காக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேளாண் விற்பனை துறை திட்டமிட்டது.இதற்காக, 398,75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், பொள்ளாச்சி மீன்கரை ரோடு உழவர் மையம், ஆனைமலை மற்றும் வடக்கிபாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகங்களில் தலா ஒரு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டது. ஒரு மையத்தின் மதிப்பு, 4.5 கோடி ரூபாயாகும். ஒவ்வொரு மையத்திலும், 40 டன் கொள்ளளவு குளிர்பதன கிடங்கு மற்றும் வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் எட்டு கடைகள் அமைக்கப்பட்டன. பொள்ளாச்சி மையம், தேங்காய் துருவல் தயாரிப்புக்கும், ஆனைமலை மையம் நீரா தயாரிப்புக்கும் தயார் செய்யப்படுகிறது. வடக்கிபாளையம் மையம் காய்கறிகள் பதப்படுத்துதல் அல்லது தென்னை பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் தயார் செய்யப்படும். அல்லது, சிப்பம் கட்டும் மையமாக மாற்றப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள வேளாண் விற்பனை துறையின் ஆணையாளர் அலுவலகத்தில், இந்த மையங்கள் ஏலம் விடப்பட்டது. இதில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தன. பொள்ளாச்சி மையத்தை, விநாயகா தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனமும், ஆனைமலை மற்றும் வடக்கிபாளையம் மையங்களை ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனமும் ஏலம் எடுத்துள்ளன. இந்த ஏல ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.இயந்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததும், மூன்று மாதங்களுக்குள் மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனைக்கு வருவது சாத்தியமாகும்.தேங்காய் விலை உயரும்!உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழிலில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள வசதியாக, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் மூன்று மாதங்களுக்கு ஏலம் எடுத்த நிறுவனங்கள் கட்டணமின்றி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின், ஒன்பது மாதங்களில் ஏலத்தொகையில், 20 சதவீதம்; இரண்டாவது ஆண்டில், 30 சதவீதம்; மூன்றாவது ஆண்டில் மீதமுள்ள, 50 சதவீத தொகையை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.முதன்முறையாக, உள்ளூரிலேயே அரசு சார்பில் விளை பொருட்கள் மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேங்காய் விற்பனை விலை நிச்சயம் உயரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X