64 சதவீதம்!ஜார்க்கண்ட் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் முடிந்தது

Updated : டிச 02, 2019 | Added : நவ 30, 2019
Advertisement
 64 சதவீதம்,ஜார்க்கண்ட் ,சட்டசபை, முதல் கட்ட தேர்தல் ,வாக்குவாத

ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல், நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற ஓட்டுப்பதிவின் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிறு சிறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மாவோயிஸ்ட் அச்சுறுத்தலையும் மீறி, காலை முதலே, மக்கள் வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மாலை நிலவரப்படி, 64 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல், நேற்று துவங்கி, வரும், 20 வரை, ஐந்து கட்டங்களாக நடக்கின்றன.


பாதுகாப்பு பணி



ஓட்டுகள் வரும், 23ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது. பா.ஜ.,வுடன், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஜார்கண்ட் விகாஸ் மோர்சா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், 37 லட்சம் வாக்காளர்களை கொண்ட, 13 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 189 வேட்பாளர்கள், போட்டியிட்டனர்.இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் ராமச்சந்திர சந்திரவன்ஷி, காங்கிரசின் மாநில தலைவர் ராமேஷ்வர் ஓரான், காங்., முன்னாள் மாநில தலைவர் சுக்தியோ பகத், முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் துாபே ஆகியோர், முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

சட்டசபை தேர்தலை புறக்கணிக்குமாறு, மவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் விடுத்திருந்ததை அடுத்து, 35 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அச்சுறுத்தலையும் மீறி, காலை, 7:00 மணி முதலே, மக்கள் வரிசையில் நின்று, ஆர்வமுடன் ஓட்டளிக்க துவங்கினர். பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்தனர். ஒரு சில ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, ஓட்டுப்பதிவு, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.கும்லா - லோஹர்தாகா வனப்பகுதியில் உள்ள கால்வாய் பாலத்தை, மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இந்த சம்பவத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


வாக்குவாதம்



இப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கனவே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.காங்., வேட்பாளர் கே.என்.திரிபாதி, பலாமு மாவட்டத்தின் கோசியாரா கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றார். அவரை, பா.ஜ., வேட்பாளர் அலோக் சவுராசியாவின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது.தொண்டர்கள் சிலர், கற்களை வீச துவங்கினர். இதையடுத்து, அங்கு பதற்றம் நிலவியது.

அந்த நேரத்தில், காங்., வேட்பாளர் திரிபாதி தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து, பா.ஜ., தொண்டர்களை மிரட்டினார்.இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நடந்த, 13 தொகுதிகளில், ஆறு தொகுதிகள் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி, அமைதியான முறையில் ஓட்டுபதிவு நடந்து முடிந்தது. மாலை நிலவரப்படி, 64 சதவீத ஓட்டுகள் பதிவானதாக,தலைமை தேர்தல் அதிகாரி வினய்குமார் சவுபே தெரிவித்தார். மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் காரணமாக, காலை, 7:00 முதல் மாலை, 3:00 மணி வரையே, ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X