சென்னை:'மாநிலம் முழுவதும், இன்று கன மழையும், கொங்கு மண்டலத்தில் உள்ள, நான்கு மாவட்டங்களில், மிக கன மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுதும், நான்கு நாட்களாக மழை கொட்டி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகை மாவட்டம், தலைஞாயிறில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் நுங்கம்பாக்கத்தில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், நேற்று பகலில் மழை பெய்யவில்லை; மாலை முதல், லேசான மழை துவங்கியது. 'இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மிக கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம்' என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், குமரி கடல் அருகில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.