ஆர்.எஸ்.மங்கலம்: பயிர் இன்ஸ்சூரன்ஸ் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் ( நவ.30) முடிவடைந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் இன்னும் பயிர் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேதியை நீட்டிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெற்பயிர்கள் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பிற்குள்ளாகும் போது, அதற்கான இழப்பீட்டு தொகை பெறுவதற்காக பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் ஆண்டு தோறும் வி.ஏ.ஓ.,க்களிடம் சாகுபடி பரப்பிற்காக அடங்கல் சான்று பெற்று பயிர் இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில் தொடக்க வோளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் பிரிமியம் வாங்கப்படாது என அதிகாரிகள் மறுத்து விட்டதாலும், தேசிய வங்கிகளும் ஒத்துழைப்பு அளிக்காததாலும், கடன்பெறா விவசாயிகள் இ-சேவை மையங்களை முழுவதுமாக நாடி செல்லும் நிலை ஏற்பட்டது.இ-சேவை மையங்களிலும் இன்டர்நெட் பிரச்னை, குறைந்த பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான விவசாயிகள் ஆர்.எஸ்.மங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களிலும் இன்னும் பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலையில் பீதியடைகின்றனர். எனவே நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்ததால் விவசாயிகளின் நலன கருதி, மாவட்ட நிர்வாகம் பயிர் இன்ஸ்சூரன்ஸ் தேதியை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.