திருப்பூர்:கால்நடைத்துறை சார்பில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 400 கிராமப்புற பெண்களுக்கு, 8.29 லட்சம் மதிப்பில், நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மேம்படுத்தும் வகையில், கால்நடைத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு, தலா, 25 எண்ணிக்கையில், நான்கு வயதுடைய அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, கூண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியம், 16 பேரூராட்சிகளில் உள்ள, 7,850 கிராமப்புற பெண்களுக்கு, 1.62 கோடி ரூபாய் மதிப்பில், நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில், முதற்கட்டமாக, கோட்டமங்கலம், குடிமங்கலம், பொன்னேரி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், புதுப்பாளையம், பொட்டையம்பாளையம் மற்றும் தொட்டம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, இலவச நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.கால்நடைத்துறையினர் கூறுகையில், 'முதற்கட்டமாக, 400 கிராமப்புற பெண்களுக்கு, 8.29 லட்சம் மதிப்பில், நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள பயனாளிகளுக்கு, விரைந்து, நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும். அதேபோல், பயனாளிகளுக்கு கூண்டு அமைத்து பராமரிக்க, 2,500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்,' என்றனர்.