காரைக்குடி: காரைக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால், வீடுகளில் மழைநீர் புகுந்ததோடு, 5 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானது.
காரைக்குடி சத்யாநகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கழிவுநீர் வெளியேற வாய்க்கால் இல்லை. வரத்துக்கால்வாய் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. காரைக்குடியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சத்யா நகரில் 5க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்தது. வீட்டிற்குள் புகுந்த மழைநீரை, மக்கள் விடிய விடிய வெளியேற்றினர். மழை காலங்களில் நடக்கும் இப்பிரச்னை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையெனவும், சேதமடைந்த வீடுகளை மராமத்து செய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.மீனாள் தெரிவிக்கையில்;ஆண்டுதோறும் இந்தநிலைதான். வீடுகளை மழைநீர் சூழ்ந்ததோடு, வீட்டின் சுவரும் இடிந்து விட்டது. இரவு முழுவதும் விழித்து தண்ணீரை வெளியே எடுத்து ஊற்றினோம். வயதானவர்கள், குழந்தைகள் அனைவரும் மிகுந்த சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.