சிவகங்கை: நடவுசெய்துவிட்டு மழையை எதிர்பார்த்திருந்த சிவகங்கை விவசாயிகளுக்கு சொல்லி வைத்தாற் போல் பெய்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, பருத்தி, கடலை சாகுபடி செய்திருந்தனர். குறிப்பாக நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு, விவசாயிகள் தொடர் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வந்த நிலையில் அடுத்து மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் தரமாக கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இம்மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் மீண்டும் தண்ணீர் தேங்கத்துவங்கியள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நடவு செய்யப்பட்ட பயிர்கள் துார் கட்டும் பருவத்திலும், விதைப்பு பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்திலும் இருப்பதால் இம்மழை அவற்றிற்கு சரியான பயனை கொடுத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகளும், வேளாண் அதிகாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.