பழநி: பழநி முருகன்கோயில் சார்பில், பக்தர்களுக்கு கூடுதலாக தங்கும் விடுதி, போக்குவரத்து நெரிசலை குறைக்க 54 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், 'பழநி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; கோயில் நிலங்களை மீட்க வேண்டும்' என வலியுறுத்தி வருகிறார்.இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று பழநியில் நகராட்சி கமிஷனர் லட்சுமணன், தாசில்தார் பழனிச்சாமி, கோயில் துணைஆணையர் செந்தில்குமார், பழநி டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கோயில் வளர்ச்சி குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது.54 ஏக்கர் நிலம்கிரிவீதியில் சுற்றளவு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோயில் அருகே வாகன நிறுத்துமிடம், தங்கும் விடுதி உள்ளிட்ட தேவைகளுக்காக 54ஏக்கர் நிலத்தை கையப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை வருவாய் துறையினர், கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்படுத்த உள்ளனர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், சுகாதாரத்தை வலியுறுத்துகிறோம். கோயிலுக்கு தனிபோலீஸ் ஸ்டேஷன் வேண்டும். கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்து அத்துக்கல் நடப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க குத்தகைதாரர் பெயர், அங்கு பணிபுரியும் நபர்கள், காலஅளவு, அதற்கான உரிமையாளர் பெயர் பலகை கடைகளில் தொங்கவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.