உடுமலை:உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காகவும், வனத்துறை சார்பில், சூழல் சுற்றுலா திட்டம் துவக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. அடர் வனம், யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள், அரிய வகை பறவைகள் என பல்லுயிரினங்களின் வாழ்விடமாகவும், வனத்தில் ஓடைகள், காட்டாறுகள் என அற்புதமான சூழல் மண்டலமாக உள்ளது.பொதுமக்கள், மாணவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சூழல் சுற்றுலா திட்டத்தை வனத்துறையினர் துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக, உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி சூழல் மேம்பாட்டு குழு மற்றும் வனத்துறையினரால் நடத்தப்படுகிறது. சின்னாறில் துவங்கி, சின்னாறு, காட்டாறு வரை, வனத்திற்குள், வன விலங்குகள், பறவைகள் மற்றும் பசுமையை ரசித்துக்கொண்டு, நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி வன அலுவலர் கணேஷ்ராம், அமராவதி வனச்சரகர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள், மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது :அமராவதி வனச்சரகம், சின்னாறு வனப்பகுதியை சிறந்த சூழல் சுற்றுலா மையமாக அமைக்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலாவில், ஐந்து கி.மீ., துாரம் வனத்திற்குள் முழுவதும் இயற்கையுடன் நடைப்பயணம், ஆற்றில் பரிசல் பயணம், மலைவாழ் மக்கள் பாரம்பரிய குடிசையில் தங்கல், உணவு என ஒரு நாள் முழுவதுமான வனச்சுற்றுலாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒரு நபருக்கு, 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.பொதுமக்களுக்கு மட்டு மின்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இயற்கை, வனம், வன விலங்குகள், பறவைகள், மரங்கள், வண்ணத்துப்பூச்சிகள், நமது நீர்ப்பிடிப்பு பகுதிகள் என இயற்கையின் அதிசயங்களை அறிந்து கொள்ள முடியும்.சின்னாறு சூழல் சுற்றுலா செல்ல, www.chinnarnaturetrail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அமராவதி வனச்சரகம், 04252 - 232523 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, வனத்துறையினர் தெரிவித்தனர்.