திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அரிவாள் தயாரிப்பில் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.'திருப்பாச்சி அரிவாள்' எனப்படும் அரிவாள் புகழ் பெற்றது.
கனரக வாகனங்களின் பழைய இரும்பு பட்டைகளை வாங்கி மனித உழைப்பு மூலம் இங்கு அரிவாள் தயாரிக்கப்படுகிறது. ஒரு அரிவாள் தயாரிக்க குறைந்த பட்சம் ஐந்து பேர் உழைப்பு தேவைப்படும். நெருப்பில் இரும்பை சுட்டு சம்மட்டியால் தட்டி தட்டி அரிவாள் தயாரிக்கின்றனர்.தற்போது திருப்புவனம் பழையூரில் அழகர் என்பவர் அரிவாள் தயாரிக்க இயந்திரத்தை நிறுவியுள்ளார்.அவர் கூறியதாவது: மனித உழைப்பால் தயாரிக்கும்போது ஒரு நாளில் ஐந்து தொழிலாளர்கள் மூலம் இரண்டு முதல் ஐந்து அரிவாள் தான் தயாரிக்க முடியும். பெங்களூருவில் இயந்திரம் மூலம் அரிவாள் தயாரிப்பதை பார்த்தேன். ரூ. 2.10 லட்சத்திற்கு இயந்திரம் வாங்கியுள்ளேன். இந்த இயந்திரம் மூலம் இரண்டு பேர், ஒருநாளில் பத்து அரிவாள் தயாரிக்க முடியும்.இரும்பு பட்டையை சூடுபடுத்தி இயந்திரத்தில் வைத்தால் அதுவே தட்டித்தட்டி அரிவாளாக்கி தரும்.இயந்திரத்திற்கு முற்றிலும் சூரிய சக்தியை பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் குறைந்த விலையில் அரிவாள் விற்பனை செய்ய முடியும் என்றார்.