கூடலுார்:'எதிர்மறை எண்ணங்களை கைவிட்டால் வெற்றி நிச்சயம்,' என, கூடலுாரில் நடந்த, 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.'தினமலர்' நாளிதழ், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரின் நலனில் தீவிர அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் வாழ்வியலுக்கு, வழிகாட்ட, 'ஜெயித்துக் காட்டுவோம், உங்களால் முடியும், பட்டம், வினாடி-வினா' என, பல்வேறு தலைப்புகளின் கீழ், கல்வி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.மேலும், மாணவ, மாணவியரின் எதிர்கால கல்வி திட்டம், வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் போன்றவற்றில், 'தினமலர்' நாளிதழ் பங்கெடுத்து வருகிறது.தற்போது, மாணவ, மாணவியரின் வாழ்வியல் வெற்றியை உறுதி செய்யும் வகையில், 'சக்சஸ் மந்த்ரா; ஜெயித்துக் காட்டுவோம் 2.0' எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்துகிறது.அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளவும், புதிய பாடத் திட்டத்தின் கீழ் வளமான எதிர்காலத்தை பெறவும், தேர்வு காலங்களில் உடல் நலம், மன நலத்தை பாதுகாக்கவும், மாணவர்களுக்கு ரகசியங்களை அள்ளித்தருகிறது.இந்நிலையில், கூடலுார் 'நர்த்தகி' மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஆலோசனைகள்:'உயர்கல்வி எனும் இலக்கு' செந்தில்குமார் (முனைவர், அமிர்தா பல்கலை):எது பிடிக்கிறதோ, எதில் மனம் லயிக்கிறதோ, எதை வாழ்க்கை பயணமாக மாற்ற முடியுமோ, எதில் பாராட்டு கிடைக்குமோ, எதில் ஈர்ப்பு வருகிறதோ, அது தான் நீங்கள் தேடும் இலக்கு. அதில் தான், உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் முழு தகவல்களை திரட்ட முடியும்.அதன் மூலம் ஆற்றல் பெருகி, வெற்றி கிடைக்கும். நேரத்தை திட்டமிடுங்கள். ஓப்பீடு செய்யாதீர்கள். வைராக்கியம், மனோதிடத்துடன் படித்தால் வெற்றி கிடைக்கும்.'மனித வளம் மற்றும் நினைவாற்றல்' குறித்து, பயிற்சியாளர் வேந்தன்:மதிப்பெண் வெளியே தெரிகிறது என்பதால் தான், தேர்வு என்றாலே பயம் ஏற்படுகிறது. படிப்பதை நினைவுப்படுத்தி பார்த்தாலே, விடைகள் மனதில் பதியும். பயத்தை கைவிட வேண்டும். தேர்வுகளில் சாதிக்க வேண்டும். ஆசிரியர்கள் கூறும் கருத்துக்களை மனதில் பதிய வைக்க வேண்டும்.தேர்வில் சாதிக்கும் வழிமுறை குறித்து, ஆசிரியர் தியாகராஜன் (அரசு மேல்நிலை பள்ளி, கோமங்கலம்புதுார், பொள்ளாச்சி):தொடர் பயிற்சி, முயற்சி மற்றும் எதிர்மறை எண்ணங்களை விடவும், அவற்றை காதில் வாங்காமலும் பயணிக்க வேண்டும். நம் தவறுகளை பார்க்காமல், மற்ற மாணவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதை விட வேண்டும். அனைத்து துறையிலும் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல கல்லுாரி மற்றும் வாழ்க்கை படிகட்டுக்கு உதவுகிறது. பாடங்களை ரசித்து படிக்க வேண்டும். போட்டி தேர்வுகளுக்கும், இதே பாடங்களே பயன்படுத்தப்படுவதால், பள்ளி கல்வியில் படிப்பது எதிர்காலத்தில் சாதிக்க வழி ஏற்படுத்தும்.தன்னம்பிக்கை பிறந்தது!பொதுத்தேர்வை எதிர்கொள்வது, குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. இந்நிகழ்ச்சி மூலம் தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. தேர்வை எளிதாக எதிர் கொள்வேன்.-அஞ்சுஷா, கூடலுார்.பொதுத்தேர்வுக்கு, தெளிவாக திட்டமிட்டு படிப்பது; உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து பல பேசிய கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.நிஷா, தேவாலாநாம் தற்போது படிக்கும், பள்ளி படிப்பு, எதிர்கால போட்டி தேர்வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.முகமதுசுகையல், கூடலுார்இந்த நிகழ்ச்சியின் மூலம், எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக, புதிய தகவல்கள் கிடைத்தது; என்னுள் புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.அமித்கிருஷ்ணன், கூடலுார்வினா புத்தகம் இலவசம்!நிகழ்ச்சியில், பொதுத்தேர்வை பயமின்றி எழுதுவதற்கான ஆலோசனைகள்; புதிய பாட திட்டம் தயாரிப்பதற்கான காரணம் மற்றும் நோக்கம்; புதிய பாட திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு நடைபெறும் விதம் உட்பட பல்வேறு தலைப்புகளில், ஆலோசனை வழங்கப்பட்டன. மாணவ மாணவியர் அனைவருக்கும், குறிப்புகள் மற்றும் வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து, 200 மாணவர்களும், ஆசிரியர்களுடன் தங்கள் சொந்த செலவில் வந்து சென்றனர்.