மதுரை:"கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்புக்கு ஸ்டாலின் சென்றார். அவர் தற்போது பதவியில் இல்லை. இப்போது மகாராஷ்டிரா சென்றுள்ளார். அங்கு என்ன நடக்கப் போகிறதோ" என அமைச்சர் செல்லுார் ராஜூ கிண்டலாக தெரிவித்தார்.
மதுரையில் அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. ஸ்டாலின், அவரது தங்கை, மகள், மருமகனுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் அ.தி.மு.க.,வை 'கையாலாகாத ஆட்சி' என அவர் விமர்சிக்கிறார்.உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்தவில்லை என வீதி வீதியாக பேசினார். ஆனால் அதை நிறுத்த நீதிமன்றத்தில் தி.மு.க., மனுத்தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் அவர் இரட்டை வேடம் போடுவது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மக்கள் இதற்கு உள்ளாட்சி தேர்தலில் பதில் அளிப்பார்கள், என்றார்.