கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமையிடத்திற்கான கட்டடம் குறித்த வரைபடம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சியை தமிழகத்தின் 34வது மாவட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26ம் தேதி துவக்கி வைத்தார்.கலெக்டர் கிரண்குராலா, எஸ்.பி., ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக மார்க்கெட் கமிட்டி அலுவலகத்தில் நாளை முதலும், எஸ்.பி., அலுவலகம் தற்போதைய நிலையில் போக்குவரத்து காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வருகிறது.தற்காலிக எஸ்.பி., அலுவலகத்திற்கான இடம் குறித்து தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலும், கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மற்றும் அதிகாரிகள் பலர் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களுக்கான நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு வீரசோழபுரம் கிராம எல்லையில் உள்ள கோவிலுக்கு சொந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கள்ளக் குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்கள் தொடர்பான வரைபடம் 'வாட்ஸ் ஆப்' பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் உலா வருகிறது. அதில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், விளையாட்டு அரங்கம், மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் குடியிருப்புகள், மின்வாரிய துணை அலுவலகம் ஆகியவை 40 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது போல் புளூபிரிண்ட் (வரைபடம்) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு அதிகாரிகளின் அதிகார பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாத நிலையில், மாவட்ட அலுவலக கட்டடம் தொடர்பான வரைபடம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமையிடம் தொடர்பான வரைபடம் குறித்து அதிகார பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப் படவில்லை என தெரிவித்தனர்.