கோவை:ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்துள்ளதால், அங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியல் திரட்ட, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாமல், புதுப்பிக்காமல் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இத்தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் திரட்டுவதோடு, இம்மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், சில நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்காமல் செயல்படுகின்றன. எனவே, வட்டாரம் வாரியாக, அங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியல் திரட்ட, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில்,' நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தால், விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பட்டியல், மறுஆய்வுக்கு உட்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன' என்றனர்.