உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை பேரூராட்சியில் 108 ஏரி, குளங்கள் இருந்தன. இதனால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் ஏரி, குளங்கள் இருந்த இடம் காணாமல் போயின.இதனால் குடிநீர் கிடைக்காமல் உளுந்துார்பேட்டை பேரூராட்சி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஏரி, குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
அதையடுத்து, உ. கீரனூர் ஏரி, உளுந்துார் ஏரி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த உ.கீரனூர் ஏரி பகுதிக்கு அருகே வசிப்பவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இருப்பினும் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆயத்தமாகினர்.இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.