வில்லியனுார் : புதுச்சேரியில் கடந்த சில தினங்களான பெய்து வரும் கன மழை காரணமாக மாநிலத்தில் நான்காவது பெரிய ஏரியான கோர்காடு ஏரி நேற்று நிரம்பியது.
வில்லியனுார் அடுத்த கோர்காடு கிராமத்தில் உள்ள ஏரி, சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தில் நான்காவது பெரிய ஏரியாக அமைந்துள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கும், அதிகபடியான தண்ணீரை வெளியேற்ற வடக்கு பகுதியில் குடுவையாறு செல்லுவதற்கு ஒரு மதகும், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மழை நீர் ஏரிக்கு வரும் வகையில் கிழக்கு பகுதியில் ஒரு மதகும்,தெற்கு பகுதியில் கோர்காடு வயல்வெளிக்கு பாசன மதகும் மற்றும் வீரன்கோவில் பகுதியில் நடு மதகு என மொத்தம் நான்கு மதகுகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சுற்று வட்டார பகுதியில் இருந்து வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஏரி நேற்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. ஏரிதுார்வாரமல் கிடப்பில் போட்டதால் செடி, கொடிகள், சம்பு, கோரைகள், ஆகாயத் தாமரை செடிகளால் படர்ந்து, ஏரியில் தண்ணீர் இருப்பதே தெரியாமல் மூடி உள்ளது.நிரம்பி உள்ள கோர்க்காடுஏரியில் படந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் பழுதடைந்துள்ள மதகுகளை சரி செய்து நிரம்பிய தண்ணீரை வெளியேறாமல் பாதுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காற்றில் பறந்த அமைச்சரின் வாக்குறுதிஆட்சி பொறுப்பேற்றதும் அமைச்சர் கந்தசாமி, அதிகாரிகள் புடைசூழ கோர்க்காடு ஏரியை பார்வையிட்டு ஏரி துார்வாரி அழகு படுத்தி படகு குழுமம் அமைத்து சுற்றுலாதலமாக மாற்றப்படும் என உறுதியளித்தார், மூன்றாண்டுகளாகியும் இதுவரை எந்த பணியும் ஏரியில் நடைபெறவில்லை.