கோவை:'ஸ்மார்ட் சிட்டி' மாநில உயர்நிலை குழு கூட்டம், சென்னையில் வரும் டிச., 4ல் கூடுகிறது. அதில், குறிச்சி குளம் மேம்படுத்துவது, 'பயோமைனிங்' முறையில் வெள்ளலுாரில் உள்ள பழைய குப்பையை அழிக்கும் திட்டங்கள், ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றன.கோவை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், 48 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ரூ.72.67 கோடியில், 18 பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. ரூ.736 கோடியில், 22 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.ஆர்.எஸ்.புரம் டி.வி., சாமி ரோட்டை, 'மாதிரி சாலை' அமைக்கும் திட்டத்துக்கு, நிபந்தனையுடன் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது; டிச., 18க்கு 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.இதேபோல், வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டுக்கும், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. குறிச்சி குளத்தையும் 'ஸ்மார்ட் சிட்டி'யில் மேம்படுத்த, ரூ.52.16 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்க, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு திட்ட அறிக்கைகளும், சென்னையில் வரும் டிச., 4ல் நடைபெற உள்ள மாநில உயர்நிலை குழு கூட்டத்தில், ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.