புதுச்சேரி : போதை ஆசாமிகளை கண்டறிய புதிதாக வாங்கப்பட்ட 20 அல்கா மீட்டர்களை பயன்படுத்துவது தொடர்பாக, போக்குவரத்து போலீசாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு குடிபோதையே காரணம் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.இதனால், குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண, புதுச்சேரி போக்குவரத்து போலீசில் ஏற்கனவே உள்ள அல்கா மீட்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், தற்போது 20 புதிய அல்கா மீட்டர் வாங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அல்கா மீட்டரில், பரிசோதனை செய்யப்படும் வாகன ஓட்டியின் புகைப்படமும் பதிவாகும். போதையின் அளவு உள்ளிட்டவை துள்ளியமாக அளவிடப்பட்டு, பிரிண்ட் செய்து வருகிறது.இந்த புதிய அல்கா மீட்டர்களை பயன்படுத்துவது தொடர்பாக, போக்குவரத்து போலீசாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.கிழக்கு போக்குவரத்து எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த பயிற்சியில், எஸ்.பி. ரட்சனாசிங், தெற்கு போக்குவரத்து எஸ்.பி., சுப்ரமணியன், முருகவேல் தலைமை தாங்கினர்.
இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், ஆறுமுகம், தனசேகர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு, புதிய மோட்டார் வாகன சட்டப்படி, அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 7000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.