கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில்(மார்க்கெட் கமிட்டி) நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி தலைமையிடமாக கொண்டு கடந்த 26ம் தேதி முதல் புதிய மாவட்டம் தோற்று விக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.தற்காலிகமாக புதிய கலெக்டர் அலுவலகம் நாளை (2ம் தேதி) முதல் மார்க்கெட் கமிட்டி அலுவலகத்தில் இயங்கவுள்ளது. இதனையொட்டி, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் இயங்குவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், கலெக்டர் கிரண்குராலா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நாளை நடத்தப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் கிரண்குராலா விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கலெக்டரின் திங்கள் தின குறைதீர்க்கும் கூட்டம், வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி நகரம், கச்சிராயபாளையம் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் (மார்க்கெட் கமிட்டி) நடக்கிறது. குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.