கோவை:ரயில்களில், 'பார்சல் வேன்' இணைத்துக் கொள்ள, ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. இது, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சரக்கு போக்குவரத்து அதிகரிக்க உதவும்; ரயில்வேக்கு வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை, திருப்பூர், சேலம், மேட்டுப்பாளையம் உட்பட, 32 ஸ்டேஷனில் பார்சல் முன்பதிவு வசதி உள்ளது.
ரயில்களில் அதிகபட்சம், 23 டன் வரை பார்சல் அனுப்பலாம். தவிர, 'கார்கோ' எக்ஸ்பிரஸ், 'பாயின்ட் டூ பாயின்ட்' ரயில்களிலும் அதிகபட்ச சரக்குகள் அனுப்பலாம்.தொழில் நகரான கோவையில் இருந்து மோட்டார் பம்ப் செட், உதிரிபாகங்கள், திருப்பூரில் இருந்து ஜவுளி பொருட்கள் என, பல வகையான பொருட்கள் சேலம் கோட்டத்தில் இருந்து அனுப்பப்படுகின்றன.அதனால், கடந்த, 2016-17 நிதியாண்டில், 5,072.10 டன்களாக (17.20 கோடி ரூபாய் வருவாய்) இருந்த பார்சல் முன்பதிவு, 2017-18ல், 5,520.13 டன்களாக (ரூ.18.87 கோடி) அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, 9.82 கோடி ரூபாய் பார்சல் முன்பதிவு மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
வருவாயை மேலும் அதிகரிக்கவும், பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர் வசதிக்காகவும், 'பார்சல் வேன்' ஒன்றை இணைத்துக்கொள்ள, ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. இது, தொழில் துறையினர் மற்றும் பார்சல் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:சேலம் கோட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பார்சல் அளவு அதிகரித்து வருகிறது. பழைய ரயில்களில், 16 டன் வரை பார்சல் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது பழைய பெட்டிகளுக்கு பதிலாக, எல்.எச்.பி., எனும் நவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் மாற்றப்படுகின்றன.இதனுடன், 'பவர் கார்' இணைக்கப்படுவதால், 8 டன் மட்டுமே தற்போது பார்சல் அனுப்ப முடிகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பிய இடங்களுக்கு முழுமையாக பார்சல் அனுப்ப முடியாததுடன், ரயில்வேக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் விதமாக, கூடுதலாக 'பார்சல் வேன்' இணைத்துக்கொள்ள ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.இப்பெட்டியில், 23 டன் வரை பார்சல் அனுப்பலாம் என்பதால், வாடிக்கையாளர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பார்சல் அனுப்புவோர், அந்தந்த ஸ்டேஷன் பார்சல் கண்காணிப்பாளர்களை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
செலவும், நாளும் குறைவு!கோல்கட்டா, ஹவுரா, கவுகாத்தி, சாந்த்ராகாச்சி உள்ளிட்ட வெளிமாநில ஊர்களுக்கு சாலை வழியாக பார்சல் அனுப்பினால், சென்றடைவதற்கு ஏழு நாட்கள் தேவைப்படுவதுடன், போக்குவரத்து செலவும் அதிகரிக்கும். ரயில் மூலம் மூன்று நாட்களில் சென்றடைவதுடன், செலவும் குறைகிறது, என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.