உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உளுந்துார்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலம் தடுப்பு சுவரில் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது. இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது இரண்டு சிமென்ட் லோடு லாரிகள், இரு பஸ்கள் என 4 வாகனங்கள் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இத்தொடர் விபத்துக்கள் குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன்பேரில் மேம்பால பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகள் முன்வந்தனர்.
உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் மணிமொழி, அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் ஆதிஅண்ணாமலை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பண்டராஜ் ஆகியோர் நேற்று கொட்டும் மழையிலும் நகர ரயில்வே மேம்பாலம் விபத்து ஏற்படும் பகுதியில் ஆய்வு செய்தனர்.விபத்து ஏற்படும் பகுதியில் பிரதிபலிப்பான்கள், ஒளிரும் மின்விளக்குகள் அமைப்பது, ஸ்பீடு பிரேக்கர், முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது உதவியாளர்கள் மஞ்சுளா, கோதண்டபாணி, குமாரசாமி, தொழில்நுட்ப உதவியாளர்கள் சந்தானம், நாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.