பேரூர்:கோவையின் இக்கால தலைமுறைக்கு, சிறுவாணி குடிநீரை மட்டுமே தெரிந்திருக்கும். வறட்சி காலத்தில் ஆபத்பாந்தவனாக திகழ்ந்த பெரியாறு குடிநீரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்குடிநீரை மீண்டும் கோவைக்கு கொண்டு வந்தால், தட்டுப்பாடு நீங்கும்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கோவையில் மிக பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. சிறுவாணி வனப்பகுதியில் இருந்து, கோவைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டனர். பல்வேறு முயற்சிகளுக்கு பின், 1929ல், 10 அடி உயரம், 30 மீ., நீளத்தில் சிறிதாக அணை கட்டினர். சாடிவயலில் சுத்திகரித்து, 450 மி.மீ., விட்டமுள்ள குழாய் வழியே, காந்திபார்க் கொண்டு வந்து வினியோகித்தனர்.ஆண்டுகள் செல்ல செல்ல, சிறுவாணி வனப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்தது; கோவையிலோ மக்கள் தொகை பெருகியது. இதன் காரணமாக, 1962ல் மீண்டும் குடிநீர் பஞ்சம் வந்ததால், மாற்று வழியை மாநகராட்சி அதிகாரிகள் தேடினர்.பெரியாறு எனப்படும் கோவை குற்றாலம் தண்ணீர் அடையாளம் காணப்பட்டது. இத்தண்ணீரும் சிறுவாணியின் ஒத்த சுவையோடு இருந்ததால், சாடிவயல் செக்போஸ்ட்டில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் பெரியாற்றின் அருகே, வனத்தில் கிணறு அமைத்தனர்.அதில் இருந்து தண்ணீரை 'பம்ப்' செய்ய, ராட்சஷ மோட்டார் பொருத்தி, 'டிரான்ஸ்பார்மர்' அமைத்தனர். சுத்திகரிக்க பெரியளவில் தொட்டி கட்டி, 1964, மே, 8ல் மின் இணைப்பு பெற்றனர். தண்ணீரை சுத்திகரித்து சிறிய குழாய்கள் வழியே, ஆங்கிலேயேர் அமைத்த சிறுவாணி குழாயுடன் இணைத்தனர்; கோவையின் குடிநீர் பஞ்சம் கட்டுக்குள் வந்தது.கோவை மக்களின் ஆபத்பாந்தவனாக ஏறத்தாழ, 16 ஆண்டுகளாக திகழ்ந்த பெரியாறு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 15 பேர் பணியாற்றியுள்ளனர். புதிதாக சிறுவாணி அணை கட்டப்பட்டதும், இதன் பயன்பாடு கைவிடப்பட்டது.ஆனாலும், தற்போது வரை, அக்கிணற்றில் தண்ணீர் இருக்கிறது. மோட்டார், குழாய் உள்ளிட்டவை இருக்கின்றன. சில லட்சங்கள் செலவிட்டால் போதும்; கோவைக்கு குடிநீராகும் இந்த பெரியாறு. கோவையின் வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள, தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.