ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், 'இன்டர்நெட்' சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், தகவல்களை பரிமாற, பயங்கரவாதிகள், 'சாட்டிலைட் போன்'களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன் இணைப்புகள் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டன. பின், மொபைல் போன் இணைப்புகள் படிப்படியாக செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், 'இன்டர்நெட்' சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
குறைவு
இந்த தடையால், பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள முடியாமல் திணறினர். அதனால், ஜம்மு - காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது குறைந்தது. இந்நிலையில், தகவல் பரிமாற்றத்துக்கு சாட்டிலைட் போன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

இது குறித்து, பாதுகாப்புப் படையினர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், சாட்டிலைட் போன்களை பயன்படுத்துவது புதிய விஷயமல்ல.எல்லைத் தாண்டி ஊடுருவ, பயங்கரவாதிகள், சாட்டிலைட் போன்களையே பயன்படுத்தி வந்தனர். அதேபோல், பாக்.,கில் இருந்தும், சாட்டிலைட் போன்களை பயன்படுத்தியே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன.

முடக்கம்
சமீபத்தில், கந்தர்பால் பகுதியில், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளிடம் இருந்து, சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஸ்ரீநகரின் சவுரா பகுதியில், சாட்டிலைட் போன் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்தநிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், இன்டர்நெட் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், இந்த சேவை, மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.