தேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம் பிளாஸ்டிக் மாற்றாக தயாரிப்பு; களமிறங்கிய பட்டதாரி பெண்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம் பிளாஸ்டிக் மாற்றாக தயாரிப்பு; களமிறங்கிய பட்டதாரி பெண்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
 தேங்காய், சிரட்டையில், உருவான, கைவண்ணம், பிளாஸ்டிக் மாற்றாக, தயாரிப்பு; களமிறங்கிய, பட்டதாரி பெண்

பொள்ளாச்சி:தேங்காய் சிரட்டைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, ஜப்பான், ரஷ்யா மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதித்து வருகிறார், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு தடை விதித்ததைதொடர்ந்து, மாற்றுப்பொருட்கள் தயாரிப்பில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கருப்பம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாரின்மனைவி ராதாலட்சுமி, 29
என்பவரும் ஒருவர். எம்.பி.ஏ., படிக்கும் இவர், இளம் தொழில் முனைவோராக உருவெடுத்துஉள்ளார்.

நல்லட்டிபாளையம் அடுத்த, கோடங்கிபாளையத்தில், தொழிலாளர்களை கொண்டு, தேங்காய் சிரட்டையை, எவ்வித ரசாயன பயன்பாடும் இல்லாமல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, விற்பனை செய்கிறார்.

ராதாலட்சுமி கூறியதாவது:சுயதொழில் துவக்க ஆர்வமாக இருந்த போது, கணவர் ஊக்கப்படுத்தியதால், தேங்காய் சிரட்டைகளை கொண்டு, அதிகமாக உபயோகப்படுத்தும் பொருட்களை வடிவமைக்க தீர்மானித்தேன். இதற்காக, இணையதளத்தில் தேடியபோது, கேரளாவிலும்,
ஜப்பான், ரஷ்யா,அமெரிக்க மற்றும் அரபு நாடுகளிலும், தேங்காய் சிரட்டையால்
உருவாக்கப்படும் பொருட்களுக்கு கிராக்கி இருப்பதை அறிந்தேன்.

கோவை சரவணம்பட்டியில், சிரட்டைகளை பாலீஷ் மற்றும் துளையிடும் இயந்திரங்களை வாங்கினோம். காங்கேயம் பகுதியில் இருந்து, ஒரே அளவான சிரட்டைகளை லோடு கணக்கில் கொள்முதல் செய்தோம். தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களின் எண்ணிக்கையும்
அதிகரித்தோம். தற்போது, 17 இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.

சிரட்டையின் தரம், வேலைப்பாடுகள் வெளிநாட்டவர்களை கவர்ந்ததால், அங்கிருந்து
கிடைக்கும் ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.தற்போது, டீ மற்றும் ஐஸ் கப், ஓவல், அகப்பை, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், சோப்பு டப்பா, ஒயின் கோப்பை, குருவிக்கூடு, ஸ்பூன்கள், போர்க், சீப்பு உட்பட, 37 பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம்.
பொருட்களுக்கு, ஆறு ரூபாய் முதல், அதிகபட்சமாக, 130 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில், பொள்ளாச்சி, கோவை நகரங்களில் கடைகடையாக சென்றும், விளக்கமாக எடுத்துக்கூறியும், கைவினை பொருட்களுக்கு வரவேற்பில்லை. மனம் தளராமல் இணையதளங்களில் தேடியபோது, கேரளா மாநிலத்திலும், வெளிநாடுகளில் சிரட்டை பொருள்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பது தெரியவந்தது.

அரசு அலுவலகங்களில் சிரட்டை கப்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால், சிறு தொழில்
வளர்ச்சி காணும். பிளாஸ்டிக் டம்ளர், கப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிரட்டையால் ஆன பொருட்கள் மாற்றாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X